Published : 29 Aug 2022 09:00 AM
Last Updated : 29 Aug 2022 09:00 AM

காவிரி, பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஈரோடு லக்காபுரம் பரிசல் துறை அருகே உள்ள நீரேற்று நிலையத்தை சூழ்ந்துள்ள வெள்ளம்

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 4,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் காவிரி மற்றும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வீடுகளில் வெள்ளம்

பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன்பட்டறை மற்றும் பசுவேஸ்வரர் வீதிகளில் உள்ள வீடுகளில் நேற்று வெள்ளம் சூழ்ந்தது.இதனால், கந்தன் பட்டறை பகுதியில் வசித்த 28 குடும்பத்தினர் மற்றும் பசுவேஸ்வரர் வீதியில் உள்ள 20 குடும்பத்தினரை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டு, அந்தந்த பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து உள்ளனர்.

மேலும், அவர்களுக்கு தேவையான வசதிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டு உள்ளது. பவானி கூடுதுறையில் பக்தர்கள் நீராடவும், பரிகார பூஜைகள் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடிவேரியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதிகளான அம்மாப்பேட்டை, ஈரோடு கருங்கல் பாளையம், வைராபாளையம், வெண்டிபாளையம் மற்றும் கொடுமுடி உள்ளிட்ட இடங்களில், வருவாய்துறை மற்றும் போலீஸார் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததோடு, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அணை நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடிக்கும் நிலையில், நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,600 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு விநாடிக்கு 1,600 கனஅடியும், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 800 கனஅடியும், காலிங்கராயன் பாசனத்துக்கு 300 கனஅடியும், ஆற்றில் 4,000 கனஅடியும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x