Published : 16 Oct 2016 09:20 AM
Last Updated : 16 Oct 2016 09:20 AM

முதல்வர் குறித்து வதந்தி பரப்பியதாக மத போதகர் கைது

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அப்போலோ மருத்துவ மனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலை யில், அவரது உடல்நிலை பற்றி சமூக வலைதளங்களில் ஏராளமான வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதை தடுக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் பலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். ஆன்லைன் மூலமும் பலர் புகார் கொடுத்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் சர்மா, மதுரை மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்த மாடசாமி ஆகிய 2 பேரை கடந்த 9-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட் டம் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த திருமணிச்செல்வம்(28), சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம்(42) ஆகிய 2 பேரை கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். நேற்று முன்தினம் கோவையைச் சேர்ந்த ரமேஷ், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் போதக ராக இருக்கும் அந்தோணி ஜேசு ராஜ் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். தனது முக நூல் பக்கத்தில் இருந்து ஜெயலலிதா உடல்நிலை பற்றிய வதந்தி செய்திகளை நண்பர்களுக்கு அனுப்பியதற்காக இவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாக 153, 505(1), 505(2) ஆகிய 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதாக இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வதந்தி பரப்பும் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே, கைது நடவடிக்கை தொடரும்” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x