Last Updated : 24 Oct, 2016 11:43 AM

 

Published : 24 Oct 2016 11:43 AM
Last Updated : 24 Oct 2016 11:43 AM

கோவையில் ஆதரவற்ற முதியோர்கள் ஆசீர்வதிக்க பார்வையற்ற குழந்தைகள் முகத்தில் பிரகாசித்த மத்தாப்பு ஒளி!

மகிழ்ச்சி பொங்கும் தீபாவளிப் பண்டிகையை வரவேற்க மக்கள் பல விதங்களில் தயாராகி வருகின்றனர். அந்த வகையில், ஆதரவற்ற முதியோர்களும், பார்வையற்ற குழந்தைகளும் தீபத் திருநாளை வரவேற்றுக் கொண்டாடி மகிழ்ந்த புதுமையான நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது.

கோவை மாவட்டம் உலியம்பாளையம் கிராமத்தில் பார்வையற்றோருக்கான அரசு உண்டு உறைவிடப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த பார்வையற்ற குழந்தைகள் தங்கிப் படித்து வருகின்றனர். ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஊக்கமளித்து கல்வி கற்றுக் கொடுப்பதுடன், பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்களைப் பங்கெடுக்க வைத்து நல்லதொரு சூழலையும் இந்தப் பள்ளி ஆசிரியர்கள் உருவாக்கி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக, முதல் முறையாக, இங்குள்ள பார்வையற்ற மாணவ, மாணவிகளும் புத்தாடை அணிந்து, இனிப்பு, பலகாரங்களை உண்டு, மத்தாப்புகளைக் கொளுத்தி மகிழ்ந்து தீபாவளி கொண்டாடினர்.

பார்வையற்ற குழந்தைகள் தீபாவளி கொண்டாடுவது எப்படி மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறதோ, அதுபோல, இக்குழந்தைகளுக்கு ஆதரவற்ற முதியோர்கள் புத்தாடை, இனிப்பு வழங்கி ஆசிர்வதித்தது நிகழ்வின் மற்றொரு மகிழ்ச்சியான தருணம்.

கோவையில் இயங்கும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை, தடம், ஊன்றுகோல் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

முன்னதாக நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் குழந்தைகள் அனைவரும் நடனம், பாடல், குழு பாடல் உள்ளிட்டவற்றை அரங்கேற்றி அசத்தினர். அதைத் தொடர்ந்து, தன்னார்வலர்கள் அளித்த புத்தாடைகளும், இனிப்புகளும் அந்தக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. கோவை மாநகராட்சி காப்பகத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியவர்கள் புத்தாடை, இனிப்புகளை குழந்தைகளுக்கு வழங்கி ஆசீர்வதித்தனர். அதைத் தொடர்ந்து அனைவரும் இணைந்து மத்தாப்புகளைக் கொளுத்தி மகிழ்ச்சி பொங்கும் தீபாவளியைக் கொண்டாடினர்.

இது எங்கள் தீபாவளி

பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவன் ராமச்சந்திரன் கூறும்போது, ‘தீபாவளி என்றால் வெடிகள் வெடிப்பார்கள் எனக் கேட்டிருக்கிறோம். இன்று தான் மத்தாப்பு கொளுத்தி கொண்டாடியிருக்கிறோம். எல்லோரையும்விட முன்கூட்டியே கொண்டாடிவிட்டோம். இதுதான் எங்களுக்கான தீபாவளி’ என்றார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறும்போது, ‘வீட்டில் இருப்பவர்கள் எப்படியேனும் ஒரு வகையில் பண்டிகையை கொண்டாடிவிடுவார்கள். ஆனால் இந்த மாணவர்களும், ஆதரவற்ற முதியோர்களும் அப்படிப்பட்ட நிலையில் இல்லை. பண்டிகை என்பதை சுயமாக அவர்கள் உணர்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x