Published : 13 Oct 2016 08:36 AM
Last Updated : 13 Oct 2016 08:36 AM

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வேண்டாம்: காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் போர்க்கொடி

வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என காங்கிரஸ் மாவட்டத் தலை வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் அக்டோபர் 17, 18 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தலுக்கு சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்தது. இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்களுடன் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பேச்சு நடத்தினர்.

இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திரு நாவுக்கரசர் சந்தித்துப் பேசினார்.

ஆனாலும் மிகக் குறைவான இடங்களையே திமுக ஒதுக்கியது. 200 வார்டுகள் கொண்ட சென்னை மாநகராட்சியில் 14 வார்டுகளும், 65 வார்டுகள் கொண்ட திருச்சி மாநகராட்சியில் 3 வார்டுகளும் மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக் கப்பட்டன. பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் 5 சதவீதத் துக்கும் குறைவான இடங் களே காங்கிரஸுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப் பதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த 7-ம் தேதி சென்னை வந்தார். தங்க ளுக்கு எந்தத் தகவலும் தெரி விக்காமல் அவர் வந்தது திமுக தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.

“முதல்வர் சிகிச்சை பெறும் படங்களை வெளியிட வேண்டும்” என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விட, “அப்படி கேட்பது சரியல்ல” என்றார் திருநாவுக்கரசர். “முதல்வர் மருத்துவமனையில் இருப்பதால் பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும்” என ஸ்டாலின் கேட்க, “அதற்கு அவசியம் இல்லை” என்றார் திருநாவுக்கரசர். திமுக - காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதையே இந்த நிகழ்வுகள் காட்டுவதாக இரு கட்சியினரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலை மையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 58 மாவட்டத் தலை வர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவர்கள் உள்ளாட்சித் தேர்தல் பற்றியே பேசியுள்ளனர். இது தொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டத் தலைவர் ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கடந்த 2011 உள்ளாட்சித் தேர்த லில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 500-க்கும் அதிகமான இடங்களில் வென்றது. சென்னை யில் திமுக 23 இடங்களில் வென்ற போது காங்கிரஸ் தனித்து 2 இடங்களில் வென்றது. ஆனால், தற்போது திமுக கூட்டணியில் மொத்தம் உள்ள 20 ஆயிரம் இடங்களில் ஆயிரம் இடங்கள் கூட காங்கிரஸுக்கு ஒதுக்கவில்லை.

கன்னியாகுமரி தவிர மற்ற மாவட்டங்களில் போனால் போகி றது என லெட்டர்பேட் கட்சிகளுக்கு ஒதுக்குவதுபோல சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்படி ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுக வினர் உதயசூரியன் சின்னத்தி லேயே மனு தாக்கல் செய்துள்ளனர். இதனை திமுக தலைமை தட்டிக் கேட்கவும் இல்லை.

முதல்வரின் துறைகள் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டதை வரவேற்று அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், “பொறுப்பு முதல்வர் தேவையில்லை என சிலர் தமிழக மக்களின் நலனின் அக்கறை இல் லாமல் பேசினர்” என திருநாவுக் கரசரை மறைமுகமாக சீண்டி யுள்ளார்.

நிலைமை இப்படியே தொடர்ந் தால் வரும் 2019 மக்களவைத் தேர்தலில் 3 இடங்களை மட்டுமே தருவேன் என கருணாநிதி சொல் வார். எனவே, வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டி யிட வேண்டும். இல்லையெனில் தமிழகத்தில் காங்கிரஸுக்கு மிக மோசமான நிலை ஏற்படும். இதனை மையப்படுத்தியே பெரும்பாலான மாவட்டத் தலைவர்கள் பேசினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டத் தலைவர்கள் கூட்டம் தொடர்பாக திருநாவுக்கரசரிடம் கேட்டபோது, “மாவட்டத் தலை வர்கள் தெரிவித்த கருத்துகளை மேலிடத்தில் தெரிவிப்பேன். உள்ளாட்சித் தேர்தல் தேதி அறி விக்கப்பட்டதும் தொகுதி பங்கீடு தொடர்பாக மீண்டும் பேசுவோம்” என்றார்.

காங்கிரஸ் மாவட்டத் தலை வர்களின் எதிர்ப்பால் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x