Published : 26 Aug 2022 05:59 AM
Last Updated : 26 Aug 2022 05:59 AM

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி: பல்வேறு துறை அலுவலர்களை ஈடுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையில் ஆதார் எண்களை இணைக்கும் பணியில் பல்வேறு துறை அலுவலர்களை ஈடுபடுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காக, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த ஆக.1-ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்இணைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர்ககன்தீப் சிங் பேடி தலைமையில்,நேற்று நடைபெற்றது. இப்பணியில் பிறதுறை அலுவலர்களை ஈடுபடுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படிநேற்றைய கூட்டத்தில் கல்லூரி முதல்வர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் போன்ற பிறதுறை அலுவலர்களுடன் ஆதார் இணைப்புகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது: அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 6பி படிவத்தை பூர்த்தி செய்து, வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டைஎண்ணை தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

மேலும், வாக்காளர்கள் https://www.nvsp.in இணையதளம் மற்றும் Voters Helpline App மூலமும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரும்பொழுது அவரின் கைபேசியில் உள்ள Garuda App மூலமாகவும் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம் என்றார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் விஷூ மஹாஜன் மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) ஜி.குலாம் ஜீலானி பாபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x