Published : 26 Aug 2022 04:15 AM
Last Updated : 26 Aug 2022 04:15 AM

ஒன்றரை ஆண்டுகளாக எம்எல்ஏ அலுவலகம் தரவில்லை: ஏனாமில் ரங்கசாமியை தோற்கடித்த எம்எல்ஏ கடும் குற்றச்சாட்டு

ஒன்றரை ஆண்டுகளாக எம்எல்ஏ அலுவலகம் தரவில்லை; அந்த அலுவலகம் முன்னாள் எம்எல்ஏ வசமுள்ளது என்று முதல்வர் ரங்கசாமியை ஏனாம் தொகுதியில் தோற்கடித்த பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ பேரவையில் குற்றம் சாட்டினார்.

அவருக்கு ஆதரவாக பாஜக மற்றும் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் கடந்த 25 ஆண்டுகளாக மல்லாடி கிருஷ்ணாராவ் வென்று வந்தார். அவர், கடந்த ஆட்சியில் காங்கிரஸில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார். ஏனாமில் கடந்த தேர்தலில் மல்லாடி கிருஷ்ணாராவ் போட்டியிடாமல் ரங்கசாமி போட்டியிட்டார். ஆனால், கோலப்பள்ளி சீனிவாச அசோக் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார்.

இரு தொகுதிகளில் களம் கண்ட ரங்கசாமி மற்றொரு தொகுதியான தட்டாஞ்சாவடியில் வென்றார். இதற்கிடையே, முதல்வர் ரங்கசாமியை ஏனாமில் தோற்கடித்த கோலப்பள்ளி சீனிவாச அசோக், " எனக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எம்எல்ஏ அலுவலகம் தரவில்லை" என்று நேற்று சட்டப்பேரவையில் புகார் தெரிவித்தார்.

இதுபற்றி சுயேச்சை எம்எல்ஏ அசோக் கூறுகையில், "கடந்த 25 ஆண்டுகளாக அங்கு எம்எல்ஏவாக இருந்தவர் கடந்த முறை சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். சுற்றுலாத்துறை இடத்தில் எம்எல்ஏ அலுவலகம் வைத்திருந்தார். தற்போது நான் எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளேன். ஏனாமில் அந்த எம்எல்ஏ அலுவலகத்தை கேட்டும் அரசு ஒதுக்கவில்லை. எனக்கு எம்எல்ஏ அலுவலகம் தராதது ஏன்?" என்றார்.

அதற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன், "பல தொகுதிகளில் எம்எல்ஏவுக்கு அலுவலக கட்டிடம் உள்ளது. பல தொகுதிகளில் இல்லை. இல்லாதவர்கள் தங்கள் வீடுகளிலோ, சில இடங்களிலோ வைத்துள்ளனர். அதுபோல் வைத்து கொள்ளலாம். ஏனாமில் புதிய கட்டிடம் கட்ட இடம் காட்டப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடக்கின்றன" என்றார்.

அதற்கு அசோக், "ஏனாமில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்த இடம் தனியாருக்கு சொந்தமானதல்ல. அரசு இடம். அங்குதான் மக்களை சந்திக்க முடியும். அதனால் புதிய கட்டிடம் கட்டும் வரையில் பழைய இடம் தேவை" என்றார்.

இதையடுத்து, "இந்த சுயேச்சை எம்எல்ஏ பாஜகவுக்கு ஆதரவு தருவதால் அலுவலகம் தரவில்லையா?" என்று மற்றொரு பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு ஆதரவு எம்எல்ஏக்கள் அங்காளன், ஜான்குமார் உள்ளிட்டோர் எழுந்து அடுத்தடுத்து இதுதொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.

"ஒன்றரை ஆண்டுகளாக எம்எல்ஏ அலுவலகம் தராதது ஏன்? பழைய எம்எல்ஏ உள்ள இடத்தை தரவேண்டியதுதானே! - முதல்வரை தோற்கடித்தவர் என்பதால் புறக்கணிக்கிறீர்களா!" என்று பல கேள்விகளை பாஜக தரப்பு எழுப்பியது.

அமை்சசர் லட்சுமி நாராயணன், " இது அர்த்தமில்லை. வேறு இடம் சொல்லுங்கள். தற்போது மல்லாடி கிருஷ்ணாராவ் டெல்லி பிரதிநிதியாக உள்ளார். அவர், அமைச்சருக்கு இணையான அந்தஸ்து உடையவர். எம்எல்ஏவை விட உயர்ந்தவர்.

முன்பு எம்எல்ஏ அலுவலகமாக ஏனாமில் இருந்தது தற்போது டெல்லி பிரதிநிதி அலுவலகமாக உள்ளது” என்றார். இதற்கு சீனிவாச அசோக், "தற்போதைய எம்எல்ஏவான எனது நிலை என்ன? தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏவை விட அவர் உயர்ந்தவரா?" என கேள்வி எழுப்பினார்.

சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் குறுக்கிட்டு, "மல்லாடி கிருஷ்ணாராவ் தொகுதியில் போட்டியிடாத பட்சத்தில் எம்எல்ஏஅலுவலகத்தை வெற்றி பெற்றவரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். அது அவருக்கு சொந்தமான இடமா? அரசு கட்டிடம்தானே?" என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பேரவைத்தலைவர் அனை வரையும் அமரச் சொல்லி அமைதிப்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x