Published : 25 Aug 2022 08:06 AM
Last Updated : 25 Aug 2022 08:06 AM

கொத்தங்குடியில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் மழையில் நனைந்து 12 ஆயிரம் நெல் மூட்டை சேதம்

கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் மழையில் நனைந்து சேதமடைந்துள்ள நெல் மூட்டைகள்.

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட கொத்தங்குடியில் உள்ள திறந்தவெளி நெல்

சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.

கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல், அப்பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, கொத்தங்குடி, திருநாகேஸ்வரம், இரும்புதலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள திறந்தவெளி கிடங்குகளில் மூட்டைகளாக வைக்கப்பட்டு லாரிகள் மூலம் அரைவைக்கு கொண்டு செல்லப்படும்.

இதில், கடந்தாண்டு குறுவைப் பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், கொத்தங்குடியிலுள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை பாதுகாப்பாக வைக்காததாலும், உரிய காலத்தில் அரைவைக்கு அனுப்பாததாலும், கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவில் பெய்த மழையில் நனைந்து 12 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.

எனவே, மாவட்ட நிர்வாகம் இங்கு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பதுடன், அவற்றை உடனடியாக அரைவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொத்தங்குடி திறந்தவெளி நெல் கிடங்குக்கு நிரந்தரமாக ஷெட் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறியது: 2021 அக்டோபர் மாதம் குறுவைப் பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கடந்த ஓராண்டாக கொத்தங்குடி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பதில் அதிகாரிகள் அக்கறை காட்டாததுடன், அவற்றை அரைவைக்கும் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இங்குள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க சுவாமிமலை சுந்தர விமலநாதன் கூறும்போது, ‘‘தஞ்சை மாவட்டத்திலேயே முதன் முதலாக கொத்தங்குடியில்தான், திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டது.

இங்கு மழையால் நெல் மூட்டைகள் சேதமடையாமல் இருப்பதற்காக ஷெட் அமைக்க வேண்டும். தரமான தார்ப்பாய் வழங்க வேண்டும். போதுமான பணியாளர்களைக் கொண்டு பராமரிக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால், இதுபோன்ற நிலை ஏற்படுகிறது.

நடமாடும் கொள்முதல் நிலையம்

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் மூலம் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்து, நேரடியாக நவீன அரிசி ஆலைக்கு கொண்டுசென்றார்கள். அதுபோல, தற்போதும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.

நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி கூறும்போது, ‘‘கொத்தங்குடியில் மழையில் நனைந்த நெல் மூட்டைகளின் சாக்குகளை மாற்றி, அவற்றை பல்வேறு ஆலைகளுக்கு அரைவைக்காக அனுப்பி வருகிறோம். இதனால் நஷ்டம் கிடையாது. சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் 2 ஆண்டுகள் ஆனாலும், சாக்குகளை மாற்றி வைத்தால் நெல் மணிகள் வீணாகாது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x