Last Updated : 24 Oct, 2016 09:31 AM

 

Published : 24 Oct 2016 09:31 AM
Last Updated : 24 Oct 2016 09:31 AM

தேசிய மருத்துவ ஆணையம் தொடங்கப்பட்டால் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி ஏதுவாகும்

மருத்துவ கவுன்சில் உறுப்பினர் ஆர்விஎஸ் சுரேந்திரன் குற்றச்சாட்டு

தேசிய மருத்துவ ஆணையம் தொடங்கப்பட்டால் வசதி படைத் தவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி என்ற நிலை வந்துவிடும் என்று தமிழக மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினருமான ஆர்.வி.எஸ்.சுரேந்திரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) 1933-ம் ஆண்டு பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது. 1956-ம் ஆண்டு இதில் பல்வேறு சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டன. மருத்துவக் கல்வி, மருத்துவச் சேவை, மருத்துவர்களை நெறிப்படுத்துதல் என நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் ஒரு சிறப்பான பணியை மருத்துவ கவுன்சில் செய்து வருகிறது. மருத்துவ கல்வி சார்ந்த முடிவுகளை எடுப்பதுடன், புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கிறது. மாநில மருத்துவ கவுன்சில்கள் மற்றும் சில மாநிலங்களால் அந்தந்த மாநில சட்டப்பேரவைகளால் உருவாக்கப்பட்ட மாநில மருத்துவ கவுன்சில்கள், டாக்டர்களை கண்காணிக்கிறது.

வெளிப்படை இல்லை

இந்நிலையில் மருத்துவ கவுன்சில் செயல்பாடுகளில் தங்களுடைய அதிகாரம் முழுமை யாக செல்லுபடியாகவில்லை என கருதிய அரசியல்வாதிகள் இந்திய மருத்துவ கவுன்சிலையும், மாநில மருத்துவ கவுன்சிலையும் கலைத்துவிட்டு தங்களுடைய கைப்பிடிக்குள் அடங்கும் ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதற்காக மத்திய அரசு கொண்டு வர இருப்பதுதான் தேசிய மருத்துவ ஆணையம்-2016 வரைவுசட்டம். மருத்துவ ஆணையம் கொண்டு வருவதற்கான காரணங்களாக, ‘இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாட்டில் வெளிப்படை யில்லை, ஊழல் மலிந்து விட்டது, புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படவில்லை’ என சொல்லப்படுகிறது.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு சுயமாக மருத்துவ கல்லூரிகள் தொடங்கவோ அல்லது புதிய திட்டங்களை வகுத்து நிறைவேற் றவோ அதிகாரமோ நிதி ஆதாரமோ வழங்கப்படவில்லை. இந்திய மருத்துவ கவுன்சில் 1956 சட்ட திருத்தங்களில் சொல்லப்படாத புதிய அம்சங்கள் எதுவுமே வரைவு சட்டத்தில் இல்லை. மருத்துவ ஆணையம் என்பது ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரானது. இந்திய மருத்துவ கவுன்சில் தவிர மருத்துவம் சார்ந்த கவுன்சில்களான பல் மருத்துவ கவுன்சில், நர்சிங் கவுன்சில், பிசியோதெரபி கவுன்சில், பாராமெடிக்கல் கவுன்சில் ஆகியவற்றின் நிலை பற்றி வரைவு சட்டம் மவுனம் சாதிக்கிறது. அப்படியானால் இந்திய மருத்துவ கவுன்சில் பொன் முட்டையிடும் வாத்து என மத்திய அரசு கருதுகிறது.

இந்த வரைவு சட்டம் நிகர்நிலை பல்கலைக்கழகங்களால் தொடங் கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி களில் வரைமுறையின்றி கல்வி கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும். மருத்துவ ஆணையத்தில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே இருக்க மாட்டார்கள். மத்திய அரசின் நியமன உறுப்பினர்களில் 100 பேரில் 60 பேர் டாக்டர் அல்லாதவர்களாக இருப்பார்கள். இதனால் நாடு முழுவதும் மருத்துவப்பணி செய்யும் 9 லட்சம் டாக்டர்களுக்கு இந்த ஆணையத்தில் பிரதிநிதித்துவம் இருக்காது. மருத்துவ படிப்பு மிக மிக வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே என்ற நிலை ஏற்படும். வடமாநிலங்களில் கட்டமைப்பு குறைவான, தகுதியான பேராசிரியர்கள் இல்லாத மருத்துவக் கல்லூரிகள் ஏராளமாக உருவாகும்.

அநீதியை எதிர்த்து குரல்

இந்த வரைவு சட்டம் இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கும், நாட் டின் ஐனநாயக கோட்பாடுகளுக்கும் எதிரானவை. வருங்காலத்தில் மருத்துவக்கல்வி இந்திய மக்களில் மத்திய தர மற்றும் மேல்தட்டு மத்திய தர மக்களுக்குக்கூட எட்டாக் கனியாகிவிடும். எனவே இந்த இந்திய மருத்துவ ஆணையம் என்ற அநீதியை எதிர்த்து மக்கள் அனைவரும் கட்டாயம் தங்கள் குரலை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x