Published : 22 Jun 2014 09:49 AM
Last Updated : 22 Jun 2014 09:49 AM

நடிகர் சந்திரசேகர், மனைவி உள்பட 11 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது: போலி ஆவணம் மூலம் நிலமோசடி செய்ததாக புகார்

ஈரோடு மகளிர் பொறியியல் கல்லூரி பேராசிரியரின் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் நடிகர் வாகை சந்திரசேகர், அவரது மனைவி ஜெகதீஸ்வரி உள்பட 11 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில், பத்திர எழுத்தர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், அம்மைநாயக்கனூர் அருகே மாலையகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் குமரவேல். இவர் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு அப்பகுதியில் 2 ஏக்கர் 97 சென்ட் நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை 2012-ம் ஆண்டு குமரவேல், தனது மகள்கள் ஈரோடு லட்சுமிநகர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் கவுசல்யா, வித்யா, ரம்யா ஆகியோருக்கு தானசெட்டில்மென்ட் பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார்.

இந்த நிலத்தில், 38 சென்ட் நிலத்தை 2010-ல் பினாமி பெயரில் போலி ஆவணம் தயாரித்து பத்திரப் பதிவு செய்ததாக தி.மு.க. செயற்குழு உறுப்பினரும், நடிகருமான வாகை சந்திரசேகர், அவரது மனைவி ஜெகதீஸ்வரி, இவரது சகோதரி மகன் மதுரை ராஜம்பாடியைச் சேர்ந்த பகீரதன், சங்கீதா, பரசு அரசன், கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த சுப்பம்மாள், மாலையகவுண்டன்பட்டி பாப்பம்மாள், சரவணன், பள்ளப்பட்டி சின்னச்சாமி, அம்மைநாயக்கனூர் துரைராஜ், கந்தப்பகோட்டை முருகபாண்டி ஆகிய 11 பேர் மீது கவுசல்யா திண்டுக்கல் நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவு போலீஸில் புகார் செய்தார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி சனிக்கிழமை திண்டுக்கல் நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவு போலீஸார், நடிகர் வாகை சந்திரசேகர், மனைவி ஜெகதீஸ்வரி, இவரது தங்கை மகன் பகீரதன் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் சுப்பம்மாள், பாப்பம்மாள், பத்திர எழுத்தர் முருகபாண்டி ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சத்திய நாராயணன் கூறியது: நடிகர் சந்திரசேகர், அவரது மனைவி ஜெகதீஸ்வரி ஆகியோர் குமரவேலிடம் அவரது நிலத்தை விலைக்கு கேட்டுள்ளனர். குமரவேல் நிலத்தை கொடுக்கவில்லை. அதனால், சந்திசேகர், ஜெகதீஸ்வரி ஆகியோர் தங்கள் உறவினரும், பினாமியுமான பகீரதன் பெயரில் சொத்தை பெற, குமரவேல் நிலத்தில் 38 சென்ட் நிலத்தை மாலையகவுண்டன்பட்டி பாப்பம்மாள், சுப்பம்மாள், சரவணன் ஆகியோர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து 2010 மார்ச் 11-ம் தேதி பத்திரப் பதிவு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலத்தை போலி கிரயம் பெற்ற பகீரதன், அவரது மனைவி சங்கீதா, சந்திரசேகர் மனைவி ஜெகதீஸ்வரி, பரசு அரசன் ஆகியோர் குமரவேலிடம், நிலத்தை கொடுக்க மறுத்ததால் பத்திரம் பதிவு செய்ததாகவும் கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். சந்திரசேகர், அவரது மனைவியைக் கைது செய்ய உயர் அதிகாரிகள் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x