Last Updated : 23 Aug, 2022 09:05 AM

 

Published : 23 Aug 2022 09:05 AM
Last Updated : 23 Aug 2022 09:05 AM

புதுக்கோட்டையில் அதிக அரசு ஊழியர்களை கொண்டு முன்மாதிரி கிராமமாக விளங்கும் அம்பேத்கர் நகர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் அரசு ஊழியர்களாகியிருப்பது அனைவரையும் வியக்கச் செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் மாங்கோட்டை ஊராட்சியில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் வகையில் அரசுப் பள்ளிகள் உள்ளன. இங்குள்ள அம்பேத்கர் நகரில் 250 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள். 2004-ம் ஆண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இந்தக் கிராமத்தில் யாருமே அரசுப் பணிக்குச் செல்லாமல் இருந்த நிலையில், 2004-ம் ஆண்டுக்குப் பிறகு இங்கிருந்து அரசுப் பணிக்குச் செல்வோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, தற்போது அந்த எண்ணிக்கை 38 ஆக உள்ளது.

இவர்கள், தாங்கள் பணிபுரிவதுடன் இல்லாமல் அடுத்தடுத்த தலைமுறைகளும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு உதவி செய்து வருகின்றனர். இதன் காரணமாக, இந்தக் கிராமம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னோடி கிராமமாக உருவெடுத்துள்ளது.

இதுகுறித்து அதே கிராமத்தைச் சேர்ந்தவரும், கந்தர்வக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியருமான சசிக்குமார், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:

அம்பேத்கர் நகர் மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியிருந்தனர். கூலி வேலை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்பதுதான் இந்தக் கிராமத்தின் வாழ்வாதார நிலை. சிலரிடம் மட்டுமே விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், 2004-ம் ஆண்டுக்குப் பிறகு போட்டித் தேர்வுகள் மற்றும் நேரடி நியமனம் மூலமாக அரசுப் பணிக்கு ஒவ்வொருவராக செல்லத் தொடங்கினர்.

அந்த வகையில், தற்போது அம்பேத்கர் நகரில் ஆசிரியர்கள் 11 பேர், காவல் துறையில் 13 பேர், வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் உட்பட 3 பேர், மருத்துவர்கள் 2 பேர், கல்வித் துறையில் ஆசிரியரல்லா பணியாளர்கள், பொதுப்பணித் துறை அலுவலர்கள் என தலா 2 பேர், போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநராக 4 பேர் மற்றும் வருவாய்த் துறையில் ஓட்டுநர் ஒருவர் என மொத்தம் 38 பேர் அரசு ஊழியர்களாக உள்ளனர்.

இவர்கள் அனைவரும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். இந்தக் கிராமத்தில் இருந்தே பணிக்குச் சென்று வருகின்றனர். இவர்களில் 6 பேர் மட்டும் போட்டித் தேர்வுகள் இல்லாமல் அரசுப் பணிகளுக்குச் சென்றுள்ளனர். இவர்களின் குடும்பங்கள் படிப்படியாக முன்னேறுவதைப் பார்த்து, மற்றவர்களுக்கும் அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு, படிப்பின் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர்.

இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இங்குள்ள அரசு ஊழியர்களே சிறப்புப் பயிற்சி அளிப்பதுடன், போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டியாகவும் உள்ளனர். இங்கு, முன்பைவிட தற்போது உயர்கல்வி படித்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், வருங்காலங்களில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

ஒரே கிராமத்தில் 38 பேர் அரசுப் பணிக்கு சென்றிருப்பதால், அந்தக் கிராமமும் முன்னேறுகிறது. இதைப் பார்த்து, மற்ற கிராமங்களைச் சேர்ந்தவர்களும் தங்களின் கிராமங்களை கல்வியால் பெருமைகொள்ளச் செய்ய வேண்டும் என எண்ணி மாற்றத்தை முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில், மாவட்டத்தில் முன்னோடி கிராமமாக அம்பேத்கர் நகர் உருவெடுத்துள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x