Published : 22 Aug 2022 05:53 PM
Last Updated : 22 Aug 2022 05:53 PM

“பெரிய நிறுவனங்களிடம் வசூல் வேட்டை நடத்தவே மின் கட்டண கருத்துக் கேட்பு கூட்டம்” - அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: "மின் கட்டண குறைப்பு தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கும் நாடகத்தை நிறுத்திவிட்டு, உயர்த்திய மின் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக குறைக்க வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், தலைவருமான அர்ஜுனமூர்த்தி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இதன்பின்னர் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பாஜகவின் சித்தாந்தம், கொள்கைகளை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும், இக்கட்சியில் இணைவதற்கு அனுமதி இருக்கிறது.

மின் துறை அமைச்சர் மற்றும் அவரது சகாக்கள், பெரிய நிறுவனங்கள், சிறு - குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஜவுளித்துறை நிறுவனங்கள் என அனைவரிடமும் பேரம் பேச ஆரம்பித்துவிட்டனர். இந்த நாடகமே ஆங்காங்கே வசூல் வேட்டை நடத்துவதற்காகத்தான். மக்களிடம் சென்று கருத்து கேட்கின்றோம், அதன்மூலமாக ஏற்றிய மின் கட்டணத்தில் ஒரு பகுதியை குறைப்பது என்று சொல்வது திமுக கட்சியின் மின்துறை அமைச்சர் அனைத்து பெரிய நிறுவனங்களிடம் இருந்து ஒரு வசூல் வேட்டை நடத்துவதற்காக போடப்படும் கபட நாடகம்தான் மக்களிடம் கருத்து கேட்பது. எனவே, இந்த நாடகத்தை நிறுத்திவிட்டு உயர்த்திய மின் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். இதுதான் பாஜகவின் கோரிக்கை.

ஆன்லைன் ரம்மியின் காரணமாக இதுவரை 30 தற்கொலைகள் நடந்துள்ளதாக காவல்துறை பதிவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், முதல்வர் கருத்து கேட்பதாக கூறுகிறார். தொடர்ந்து என்ன கருத்து கேட்கிறார் என்பது தெரியவில்லை. ஆன்லைன் ரம்மியை மாநில அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். கருத்து கேட்டு காலம் தாழ்த்தாமல், இனி 31, 32-வதாக யாரேனும் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்டால், அவர்களின் ரத்தம் ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மீதும் மற்றும் முதல்வரின் கையிலும்தான் இருக்கும். அவர்கள்தான் அதற்கு பொறுபேற்க வேண்டும். எனவே, ஆன்லைன் ரம்மிக்கு முதல்வர் உடனடியாக தடை விதிக்க வேண்டும்.ஆவின் ஹெல்த் மிக்ஸ் மார்க்கெட்டிற்கு வரும் என்று அமைச்சர் மறைமுகமாக கூறியிருப்பதை பாஜக மனதார வரவேற்கின்றோம்.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு, ஆட்சியாளர்கள் இலவசங்கள் குறித்து அறிவித்து எப்படி ஆட்சியை பிடிக்கிறார்கள் என்பது தொடர்பான விவாதமே தவிர, குடிமக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமையை இலவசம் என்று யாரும் பேசவில்லை. பிரதமர் மோடி கொடுத்த வீடு, கேஸ் உள்ளிட்டவை எல்லாம் இலவசங்கள் கிடையாது. அது மக்களின் உரிமையாக அவர்களது கடமையாக கொடுத்துள்ளனர்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x