Published : 08 Jun 2014 12:58 PM
Last Updated : 08 Jun 2014 12:58 PM

‘எனது மூச்சு நிற்கும்வரை முழங்குவதை நிறுத்தமாட்டேன்’: நாட்டுநடப்பை வெளுத்து வாங்கும் வேங்கையன்

‘‘கண்மாயக் காணோம்..
எங்கடா கண்மாயக் காணோம்..
நம்ம கண்மாயக் காணோம்..
பழைய கண்மாயக் காணோம்..’’

- 79 வயதிலும் கணீரென ஒலிக்கிறது வேங்கையன் குரல்.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுப்புறப் பாடல்கள் மூலம், தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களை நறுக்குத் தெறித்தது போல் சொல்லிக் கொண்டிருக்கிறார் வேங்கையன். வத்தலக்குண்டு அருகிலுள்ள பட்டிவீரன்பட்டியில் பிறந்த வேங்கையன், 1950-லேயே திண்டுக்கல் காந்தி கிராமத்தில் இருந்த ஊழியரகத்தில் கிருஷ்ணம் மாள் ஜெகநாதனுடன் இணைந்து பணியாற்றியவர். எந்தவொரு சூழலையும் அரை மணி நேரத் துக்குள் பாட்டாக எழுதி அதுக்கொரு மெட்டமைத்து விடும் திறமைசாலி.

தற்போது வத்தலக்குண்டில் வசிக்கும் வேங்கையன், மதுரை யில் உள்ள தானம் அறக்கட்ட ளையின் களஞ்சியம், வயலகம் அமைப்புகளில் இருபது ஆண்டு களாக பாடல் பயிற்றுநராக இருக்கிறார். பல மணி நேரம் நிகழ்த்தப்படும் சொற்பொழிவுகளால் விளக்க முடியாத கருத்துக்களை, தனது ஒற்றைப் பாடலில் உணர வைத்துவிடும் ஆற்றல் படைத்த இவரை ‘தமிழக சர்வோதய இயக்கத்தின் தூண்’ என்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள வானொலி நிலையங்களில் இவரது குரல் மிகப் பிரபலம். தனது பாடல்களை தொகுத்து இதுவரை எட்டு நூல்களை வெளியிட்டிருக்கிறார் வேங்கையன். இவரது குரல் பதிவுகள் அடங்கிய பத்து ஒலிப் பேழைகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. தன்னைப் பற்றி வேங்கையனே விவரிக்கிறார்...

‘‘ஐந்தாம் வகுப்புக்குமேல் படிப்புக்கு வழியில்லை. காந்தி கிராமத்தில் பூமிதான இயக்கத்தில் சேர்ந்து நிர்மாண ஊழியன் பயிற்சி எடுத்தேன். கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை சென்று நிலங் களை தானம் கேட்போம். அந்தப் பயணத்தின்போது புரட்சிகரமான எனது பாடல்கள்தான் குழுவி னருக்கு உத்வேக மந்திரமாய் இருக்கும். கக்கன், காமராஜர், பக்தவத்சலம், ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர்., சஞ்சீவரெட்டி இவர்களின் மேடைகளில் எல்லாம் பாடி இருக்கிறேன்.

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது அவர் கையால் எனக்கு விருது கொடுத்திருக்கிறார். பசு பாதுகாப்பு இயக்கத்துக்காக மும்பைப் போராட்டத்தில் பாடியதால் சிறைக்குப் போயிருக்கிறேன். இந்தியா விண்வெளிக்கு ராக்கெட் விட்டபோது, ‘அப்போலோ அங்கு பாயுதடா.. அடிவயிறு இங்கு காயுதடா..’ என்று அப்போது நாடு இருந்த நிலைமையை பாட்டில் சொன்னேன்.

களஞ்சியம் அமைப்பில் இதுவரை 4 ஆயிரம் பேருக்கு நாட்டுப்புறப் பாடல்கள் பாட பயிற்சி கொடுத்திருக்கிறேன். முறையாக இசை படிக்கவில்லை என்றாலும் எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் அரை மணி நேரத்தில் அழகான மெட்டில் பாடலை எழுதிவிடும் ஆற்றல் இறைவன் எனக்குத் தந்த கொடை.

2 ஆயிரம் பாடல்கள்...

இதுவரை 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிவிட்டேன். இன்னமும் எழுதிக் கொண்டே இருக்கிறேன். இந்தக் காலத்து இளைஞர்களைப் பற்றியும் சுகாதாரம், சுற்றுப்புறச் சூழல், பெண்கள் விழிப்புணர்வு, மது ஒழிப்பு இவைகளைப் பற்றியும் பக்கம் பக்கமாய் பாட்டுக்கள் நம் கைவசம் இருக்கு. இன்றைக்கும் மதுரை காந்தி மியூஸியத்தில் எந்த விழா நடந்தாலும் அங்கே கட்டாயம் நான் பாடுவேன். மூச்சு நிற்கும் வரை நாட்டுக்காக முழங்குவதை நிறுத்த மாட்டான் இந்த வேங்கையன்..’’ உரக்கமாகச் சொன்னார் வேங்கையன்.

நாட்டையும் நாட்டுப்புற இசையையும் மூச்சாய் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கதர்ச்சட்டை காந்தியவாதிக்கும் ஒரு ஆதங்கம் இன்னும் அடிமனதில் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது, ‘எனக்கு ஏன் இன்னும் கலைமாமணி விருது கொடுக்கவில்லை?’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x