Published : 20 Aug 2022 03:53 PM
Last Updated : 20 Aug 2022 03:53 PM

பரந்தூர் நீர்நிலைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

சென்னை: "பரந்தூரில் உள்ள நீர் வழித்தடங்களில் நீர் ஓட்டம் எந்தவித தடையும் இன்றி தமிழக அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும். விமான நிலைய செயல்பாட்டினால் சுற்றுப்பகுதி நீர்நிலைகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாக்கப்படும்" என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பரந்தூரில் உள்ள நீர் வழித்தடங்களில் நீர் ஓட்டம் எந்தவித தடையும் இன்றி தமிழ்நாடு அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும். பெரிய நெல்வாய் ஏரி (360 ஏக்கர்) திட்ட செயல்பாட்டு பகுதிக்கு உள்ளே இருந்தாலும், அதனை ஆழப்படுத்தி தொடர்ந்து ஏரியாக பராமரிக்கப்படும். விமான நிலைய செயல்பாட்டினால் சுற்றுப்பகுதி நீர்நிலைகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாக்கப்படும்.

புதிய விமான நிலைய திட்ட பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியின் நீர்நிலைகள், விவசாய நிலங்களின் நீர்பாசன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இணைக்கப்படும். நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவதற்காக தற்போதுள்ள நீர்நிலைகள் தேவைப்படும் இடங்களில் ஆழப்படுத்தப்படும்.

விமான நிலைய திட்டப்பகுதியில் உள்ள நீர்நிலைகள், வடிகால் மூலம் சுற்றியுள்ள நீர்நிலைகளுடன் இணைக்கப்படும். இந்நீர் சுற்றுப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் முதலில் நிரம்பும் வகையிலும், பின்பு அதிகப்படியான நீர் கால்வாயில் வெளியேறும்படியும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும்.

புதிய விமான நிலைய திட்டப்பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்வதற்கும், அதனை தொடர்ந்து பராமரிப்பதற்கும் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதற்கும், புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் மாற்று திட்டங்களை பரிந்துரைக்கவும், ஒரு உயர்மட்ட தொழில் நுட்ப குழு அமைக்கப்படும். இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நீர் தட்டுப்பாடு ஏற்படாமல் காக்கப்படும். மழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததான இப்புதிய விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு, விவசாயிகளின் நலனில் மிகவும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கும் சந்தை விலையைவிட கூடுதலாக மிகவும் திருப்திகரமான இழப்பீட்டை வழங்கும்.

புதிய விமான நிலையத்தின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கப்பெறும் பொருளாதார வளர்ச்சி சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் (ICAO) ஆய்வின்படி, விமான போக்குவரத்திற்கு செலவழிக்கப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், 325 ரூபாய் அளவிற்கு பொருளாதார பலன்கள் கிடைக்கும் (3.25 மடங்கு) மற்றும் ஒவ்வொரு 100 நேரடி வேலை வாய்ப்புக்கும் 610 நபர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இப்புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாடு பல மடங்கு அதிகமாக தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையும். இதன் மூலம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவது மட்டுமின்றி, விமான நிலையம் மூலம் உருவாகும் அனைத்து பொருளாதார பலன்களையும் அவர்கள் கிடைக்கப் பெறுவர்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x