Published : 13 Oct 2016 09:01 AM
Last Updated : 13 Oct 2016 09:01 AM

பயணத்தின்போதே திருமணம்: மஹாராஜா சொகுசு ரயிலில் 8 நாட்களுக்கு ரூ.5.5 கோடி கட்டணம் - ஐஆர்சிடிசி புது திட்டம் அறிவிப்பு

மஹாராஜா சொகுசு ரயிலில் பயணத்தின்போதே திருமணம் செய்து, 8 நாட்களுக்கு கொண் டாடும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.5.5 கோடி என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

இந்தியாவில் சொகுசான பயணத்தை வழங்குகிறது மஹாராஜா ரயில். இந்த ரயிலில் உள்ள அறைகளும் ராஜா காலத்து அலங்காரங்களோடு சொகுசாக இருக்கும். அதுபோல பணியாளர்கள், உணவு, சேவை என எல்லாமே ராஜ உபசாரமாக இருக்கும். இதற்கிடையே, மஹாராஜா சொகுசு ரயிலில் திருமணம் நடத்த ஐஆர்சிடிசி நிறுவனம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக ரூ.5 கோடியே 50 லட்சம் என கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

இது தொடர்பார் ஐஆர்சிடிசி யின் மேற்கு மண்டல உயர் அதிகாரி பினாகின் மோராவால் கூறிய தாவது:

மஹாராஜா சொகுசு ரயிலில் ஒரு வாரம் திருமண விழாவை கொண்டாடும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளோம். இதில் 88 பேர் சொகுசாக பயணம் செய்யும் வகையில் தனி ரயிலாக இருக்கும். மொத்தம் 8 நாட்கள் பயணம் செய்யலாம். இதற்கான கட்டணம் ரூ.5 கோடியே 50 லட்சம். அஜந்தா, உதய்பூர், ஜோத்பூர், பிகானீர், ஜெய்ப்பூர், ராந்தம்போர், ஆக்ரா ஆகிய இடங்கள் வழியாக மும்பையில் இருந்து டில்லி செல்லும் வகையில் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற திருமணம் செய்யும் அனுபவத்தை மணமகன், மணமகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் எப்போதும் மறக்க மாட்டார்கள். காலம், காலமாக அவர்களின் நினைவில் இருக்கும்.

இதேபோல், மற்றொரு பயணதிட்டமும் இருக்கிறது. அது புதுடில்லியில் இருந்து புறப்பட்டு மீண்டும் புதுடில்லியை வந்து சேரும் பயண திட்டமாகும். அதில் ஜெய்ப்பூர், ஆக்ரா, குவாலியர், கஜூராஹோ, வாரணாசி, லக்னோ ஆகிய இடங்களை பார்க்கலாம். அதில் 20 டீலக்ஸ் கேபின்கள், 18 சிறுவர்களுக்கான சூட்கள், 4 சூட்கள் மற்றும் ஒரு பிரெசிடென்சியல் சூட் கொண்ட 43 கெஸ்ட் கேபின்கள் கொண்ட 24 பெட்டிகள் உண்டு. 8 நாள்கள் கொண்ட இந்த சுற்றுலாவில் ஒரு நபருக்கு சாதாரணமாக ரூ.4.5 லட்சம் முதல் பிரசிடென்சியல் சூட்டுக்கு ரூ.15.8 லட்சம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருமண திட்டத்துக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். கார்ப்பரேட் நிறுவன விழாக்கள், திரைப்பட படப்பிடிப்பு, பேஷன் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இந்த மஹாராஜா ரயிலில் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x