Last Updated : 26 Oct, 2016 08:38 AM

 

Published : 26 Oct 2016 08:38 AM
Last Updated : 26 Oct 2016 08:38 AM

தமிழகத்தில் பாஜக மாவட்ட அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட ரூ. 60 கோடி நிதி: கட்சித் தலைமை வழங்கியது

தமிழகத்தில் பாஜக மாவட்ட அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.60 கோடியை அக்கட்சியின் அகில இந்திய தலைமை வழங்கியுள்ளது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, கடந்த 2014 மே 26-ம் தேதி பதவி யேற்றது. அப்போது பாஜக தேசிய தலைவராக இருந்த ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, 2014 ஜூலை 9-ம் தேதி கட்சியின் தேசிய தலைவராக அமித்ஷா பொறுப்பேற்றார்.

இதையடுத்து, நாடு முழுவதும் அனைத்து மாவட்ட கட்சி அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டிடங்கள் கட்டப்படும் என அமித்ஷா அறிவித்தார். அதன்படி, நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான பாஜக மாவட்ட அலு வலகங்களுக்கு சொந்தமாக இடம் வாங்கி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் 100 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தமிழகத்தில் பாஜக கட்சி ரீதியாக 49 மாவட்டங்கள் உள்ளன. இதில் தென் சென்னை, கன்னியா குமரி தவிர மற்ற மாவட்ட அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் இல்லை. எனவே, மற்ற மாவட்ட அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்ட அகில இந்திய தலைமை ரூ.60 கோடியை வழங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்துக்கும் ரூ.1 கோடி முதல் ரூ.1 கோடியே 25 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக மாநில அளவில் பொறுப்பாளராக எம்.சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

அமித்ஷாவின் திட்டப்படி 49 மாவட்ட அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டிடங்கள் கட்ட தலா ரூ.1.25 கோடியை தேசிய தலைமை வழங்கியுள்ளது. குறைந்தது 5 ஆயிரம் சதுர அடியில் அலுவலகம் அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்தத் தொகையைக் கொண்டு முதலில் இடம் வாங்க முயற்சிகளை மேற் கொண்டு வருகிறோம்.

இதுவரை திருவண்ணாமலை, பெரம்பலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடம் வாங்கப்பட்டு பத்திரப்பதிவு முடிந்துள்ளது. தருமபுரி, வேலூர், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, நாகை, சிவகங்கை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடங்கள் வாங்கப் பட்டுள்ளன. அடுத்த வாரத்தில் பத்திரப்பதிவு முடிய உள்ளது.

மீதமுள்ள மாவட்டங்களில் இடம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக பல இடங்களில் பத்திரப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் இடங்கள் வாங்கப்பட்டு பத்திரப் பதிவை முடித்து விடுவோம்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் போன்ற மாநகரங்களில் நிலத்தின் விலை அதிகமாக இருப்பதால் கூடுதல் தொகையை வழங்குமாறு அமித்ஷாவிடம் கேட்டுள்ளோம். ஒவ்வொரு அலுவலகத்துக்கும் கட்டிடம் கட்ட குறைந்தது ரூ.2 கோடி செலவாகும். மீதமுள்ள தொகையை கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்களிடம் இருந்து திரட்ட இருக்கிறோம்.

இதற்காக மாநிலத் தலை வர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது. அதில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மாவட்டத் தலைவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சக்கரவர்த்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x