Published : 19 Aug 2022 09:20 AM
Last Updated : 19 Aug 2022 09:20 AM

வீடுகளை, நிலங்களை கொடுத்த கிராம மக்களுக்கு என்எல்சி செய்தது என்ன? - விவசாயிகள் சரமாரி கேள்வி

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் நடந்த நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் அமைச்சர் சி.வெ. கணேசன் பேசினார். உடன் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் மற்றும் என்எல்சி அதிகாரிகள்

என்எல்சி இந்தியா நிறுவனம் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நெய்வேலி வட்டம் -11 லிக்னைட் அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வாணதிராயபுரம்,வடக்கு வெள்ளூர், கரிவெட்டி, கத்தாழை, வளையாமதேவி உள்ளிட்ட 14 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பேசுகையில், “என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த காலங்களில் தங்கள் நிலங்களை கையகப்படுத்தும் போது வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை, வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை இதுவரை வழங்கவில்லை. சமீபத்தில் தேர்வு செயயப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை, குறிப்பாக நிலங்களை கொடுத்த ஒருவருக்கும் நிரந்தர வேலை வழங்கவில்லை.

கடந்த காலங்களில் எதையும் செய்யாத நிலையில், தற்போது நிலம் கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனம், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, ஏக்கர் ஒன்றுக்கு 50 லட்சம் இழப்பீட்டு தொகை உள்ளிட்டவை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

மேலும், என்எல்சி நிறுவனம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்களுக்கு சாலை, குடிநீர் வசதி பள்ளிக்கூடங்களில் கட்டிட வசதி, மருத்துவமனைகள் அமைத்து தர வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் தரப்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.

குறைகளைத் தீர்ப்போம்

இதனை தொடர்ந்து என்எல்சி இந்தியா நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் பேசுகையில், “இங்கு கலந்து கொண்ட அனைவரையும் எனது குடும்பமாகவே கருதுகிறேன். உங்களது குடும்பத்தில் ஒருவனாக உங்கள் குறைகளை கேட்டு அறிவதில் மிகுந்த கவனமுடன் இருந்தேன். இந்நிகழ்ச்சி எனக்கு மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தியது. என்எல்சி நிறுவனம் தமிழகத்தில் உருவாகி, பிற மாநிலங்களில் தனது நிறுவனத்தை விரிவுபடுத்தி வருகிறது.

எனக்கு தமிழ் மொழி தெரியாது ஆனால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசிய விதங்கள் மூலம் அவர்களின் நீண்ட நாள் பிரச்சினைகள் எனக்கு நன்றாக தெரிய வருகிறது. கடந்த காலங்களில் உரிய இழப்பீடு தொகையை முழுமையாக வழங்காததும், வேலை வாய்ப்பு வழங்காததும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.

குறிப்பாக வீடு, நிலம் கொடுத்த பெரும்பாலானவர்கள் இழப்பீட்டுத் தொகை குறித்தும், நிரந்தர வேலை குறித்தும் பேசினார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்து குறைகளையும் நிறைவேற்றித் தர அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன், “கடந்த காலங்களில் என்எல்சி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தொகை மற்றும் வேலைவாய்ப்பை முழுமையாக வழங்காதது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் காலங்களில் பாதிக்கப்படுகின்ற அனைத்து கிராமங்களுக்கும் அதிகாரிகள் தலைமையில் ஒரு குழு அமைத்து பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”.

இதற்காக தமிழக முதல்வர் மத்திய அரசுடன் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார். விவசாயிகளை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்” என்றார்.

கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சபா ராஜேந்திரன், வேல்முருகன், ராதா கிருஷ்ணன், அருண்மொழித்தேவன், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டுபேசினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன், கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, வட்டாட்சியர் சுரேஷ்குமார் மற்றும் என்எல்சி நில எடுப்பு அதிகாரிகள், வருவாய் துறையினர், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x