Last Updated : 12 Oct, 2016 12:09 PM

 

Published : 12 Oct 2016 12:09 PM
Last Updated : 12 Oct 2016 12:09 PM

சாத்தூரில் ஓடும் பேருந்தில் இளைஞர் சுட்டுக் கொலை: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். உடனடியாக பேருந்தில் இருந்து குதித்த கொலையாளி தப்பி ஓடிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று நேற்று காலை புறப்பட்டது. முருகானந்தம் என்பவர் பேருந்தை ஓட்டினார். சாத்தூர் படந்தால் பேருந்து நிறுத்தம் வந்தபோது பேருந்தில் வந்த 2 இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் இளைஞர் ஒருவரை சுட்டுவிட்டு ஒருவர் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடினார். குண்டு பாய்ந்த இளைஞர் இருக்கையில் இருந்தபடியே தலைகுப்புற சரிந்த நிலையில் இறந்தார். இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பலரும் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓடினர். பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சிவராஜன் ஆகியோர் சுட்டவரை விரட்டினர். அவர் துப்பாக்கியுடன் சாத்தூர் கடைவீதி வழியாக தப்பி ஓடிவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், அச்சமும் நிலவியது.

இதுபற்றி தகவலறிந்து வந்த சாத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீ ஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இறந்து கிடந்த இளைஞரின் சட்டைப்பையில் இருந்த ஆதார் அட்டையின் மூலம் இறந்தவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த காந்தாரி என்பவரது இளைய மகன் கருப்பசாமி(24)என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பசாமி, கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றினார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ஜனனி பிரியா என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. கவிதா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மோட்டார் சைக்கிளை இடித்தது தொடர்பாக கருப்பசாமியின் அண்ணன்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில், கடந்த ஜூலை 2-ம் தேதி கோவில் பட்டியில் அப்துல்லா என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கருப்பசாமியின் அண்ணன்கள் மந்திரமூர்த்தி, கனகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். மேலும் இவர்கள் குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டனர்.

இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் காந்தாரி குடும்பத்தினர் சிக்கினால் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், விடுமுறைக்காக கோவில்பட்டி வந்த கருப்பசாமி மீண்டும் நேற்று கோயம்புத்தூருக்குப் புறப்பட்டுள்ளார். அப்போது, அப்துல்லாவின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் விதத் தில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப் பட்டதாக சொல்லப்படுகிறது.

ஏர் பிஸ்டல் ரக கள்ளத் துப்பாக் கியை கொலையாளி பயன்படுத்தி இருக்கலாம் என்றும் சுட்டவர் யார், அவருக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

சம்பவ இடத்தில் டிஐஜி ஆனந்த்குமார் சோமானி, எஸ்பி ராஜராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர். எஸ்பி ராஜராஜன் கூறும்போது, “அப்துல்லா கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் கருப்பசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம். கருப்பசாமியை கொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் அவரை சிலர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர் களில் ஒருவர் கருப்பசாமியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். குற்றவாளிகளை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

மேலும், பயணிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் துப் பாக்கியின் விவரங்கள் குறித்த தகவல்களையும் போலீஸார் சேக ரித்து வருவதாகவும் எஸ்பி ராஜ ராஜன் தெரிவித்தார். அப்துல்லா குடும்பத்தினர் சிலரிடமும் போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.

கருப்பசாமியின் தந்தை காந்தாரி கூறும்போது ‘‘அப்துல்லா குடும்பத்தினரால் என் மகன்களின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என்ப தால்தான் கருப்பசாமியை கோயம்புத்தூருக்கு வேலைக்கு அனுப்பினேன். விடுமுறைக்கு வந்தவனை நோட்டமிட்டு கொலை செய்துவிட்டனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x