109-வது ஜெயந்தி, குருபூஜை விழா: தேவர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

109-வது ஜெயந்தி, குருபூஜை விழா: தேவர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
Updated on
2 min read

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு அவரது 109-வது ஜெயந்தி, குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், எம்.மணிகண் டன், ஜி.பாஸ்கரன் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து ஆகியோர் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் பொன்.முத்துராமலிங்கம், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், சுப.தங்கவேலன், ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் சுப.த.திவாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேவர் திருமகனார் தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டிருந்தார். தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் எனக் குரல் கொடுத்தவர். விவசாயிகள் நலனிலும் அக்கறை கொண்டிருந்தார்” என்றார்.

பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் குட்லக் ராஜேந்திரன், முதுகுளத்தூர் எம்எல்ஏ மலேசியா பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். திருநாவுக்கரசர் கூறும்போது, “காமராஜர், தீரர் சத்தியமூர்த்தி ஆகியோருடன் இணைந்து பல ஆண்டுகள் காங்கிரஸ் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட பெருமை தேவருக்கு உண்டு. தேர்தலில் நின்ற தொகுதிகளில் எல்லாம் வெற்றி பெற்றவர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கியவர். அனைத்து சமுதாய மக்களுடன் இணக்கமாக வாழ்ந்தவர்” என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநில நிர்வாகி புலவர் செவந்தியப்பன், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.எம்.குணா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். வைகோ கூறும்போது, “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரதி பிம்பமாக விளங்கியவர் தேவர் திருமகனார். அவர் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். காவிரி நீர் பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினையை எதிர்கொள்ள தேவரின் துணிச்சலை பெற அனைவரும் ஒன்று சேர்ந்து சபதம் ஏற்போம்” என்றார்.

தமாகா

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, முன்னாள் எம்பிக்கள் உடையப்பன், ராம்பாபு, முன்னாள் எம்எல்ஏக்கள் ஆர்.ராம்பிரபு, கே.எஸ்.டி.ராஜேந்திரன் உள் ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

பின்னர் வாசன் செய்தியாளர் களிடம் கூறும்போது, “தேவர் ஜெயந்தி விழாவில் அவர் செய்த பணி, சமூகத்துக்கு ஆற்றிய பணி தொடரும் வகையில் உறுதி எடுத்துக்கொள்வோம்” என்றார். மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் ச.நடராஜன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in