Published : 18 Aug 2022 03:49 PM
Last Updated : 18 Aug 2022 03:49 PM

'தேசப்பற்று பெயரில் மக்களை திசைதிருப்பிவிட்டு பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை' - சீமான்

திருச்சி: "தேசிய கொடி, தேசப்பற்று என்று அனைவரையும் திசை திருப்பிவிட்டு, பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

திருச்சி நீதிமன்ற வளாகத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " 16 ஆண்டுகள் சிறையில் இருந்த நேரு எங்கே? மோதிலால் நேருவின் மகன். மிகப்பெரிய பணக்காரரின் மகனான நேரு 16 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவர் விடுதலை செய்யக்கூறி மன்னிப்புக் கடிதம் எழுதிகொடுத்தாரா? அவருடன் எப்படி சாவர்க்கரை ஒப்பிடுவீர்கள்?

சாவர்க்கர்தான் உங்களுக்கு பெரிய அடையாளம் என்றால், 3 ஆயிரம் கோடிக்கு சிலை வைத்தீர்களே, குஜராத்தில் அதுபோல வைத்துக்கொள்ள வேண்டியதுதானே. அவரை எப்படி வீரர் என்கிறீர்கள், இரண்டுமுறை மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்து, என்னை விடுதலை செய்தால், உயிருள்ளவரை பிரிட்டிஷ்காரர்களுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று எழுதிய கடிதம் இருக்கிறதா, இல்லையா? எனக்கு பென்சன் கொடுங்கள் என்று பென்சன் வாங்கியவர் வீரரா? இப்படித்தான் வரலாறு காலகாலமாக திரிக்கப்படுகிறது.

திடீரென்று,அனைவரையும் தேசிய கொடியேற்று என அனைத்து மக்களையும் இந்த பக்கம் திரும்ப வைத்துவிட்டு, பில்கிஸ் பானுவை வன்புணர்வு செய்து, பச்சிளங் குழந்தையை சுவற்றில் அடித்து கொன்றவர்களை 15 ஆண்டுகளாகிவிட்டது என்று இன்று விடுதலை செய்திருக்கின்றனர்.

அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்துவிட்டு, அதற்காக ஒரு குழுவை அமைத்து அந்த குழுவை பரிந்துரை செய்ய வைத்து, நீதிமன்றம் விடுதலை செய்ய கூறவில்லையே.

ஆனால், பேரறிவாளனுக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என்று கூறுகிறது. ஆனால், விடுதலை செய்யக்கூடாது என்று காங்கிரஸைவிட பாஜக அதிகம் கூவுகிறதே ஏன்? நீதிமன்ற சொன்னபிறகும், இவர்கள் யாரையும் விடுதலை செய்யவில்லை. ஆனால், அங்கு நீதிமன்றம் சொல்லவில்லை, யாரையும் கேட்காமல் தேசிய கொடி, தேசப்பற்று என்று அனைவரையும் திருப்பிவிட்டு 11 பேரையும் விடுதலை செய்துவிட்டீர்கள். இது எவ்வளவு பெரிய தேச குற்றம்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x