Published : 20 Oct 2016 09:29 AM
Last Updated : 20 Oct 2016 09:29 AM

மண்டல சுற்றுச்சூழல் மாநாடு சென்னையில் 22-ம் தேதி தொடங்குகிறது: பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி தகவல்

தென்னிந்திய அளவிலான மண்டல சுற்றுச்சூழல் மாநாடு சென்னையில் 22-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் என்று பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு நீதிபதி பி.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தேசிய பசுமை தீர்ப்பாயம், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு, தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் தென்னிந்திய அளவிலான மண்டல சுற்றுச்சூழல் மாநாடு, வரும் 22, 23 ஆகிய தேதிகளில், தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெறுகிறது.

இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.பானுமதி, புதுச்சேரி யூனியன்பிரதேச துணைநிலை ஆளுநர்கிரண் பேடி, பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் சுவாதந்தர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். இதுபோன்ற மாநாடு தென்னிந்திய அளவில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

இந்த மாநாட்டில் திடக்கழிவு மேலாண்மை, பல்லுயிர் பெருக்கம், தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு, பருநிலை மாற்றாத்தால் மனித உரிமைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் நீதிபதிகள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.அதில் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களும் நடைபெறும்.

நிறைவு நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பங்கேற்கிறார். இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளும், www.tndalu.in என்ற டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்.

கல்சா மஹால் புனரமைப்பு பணிகள் முடிந்தவுடன், அடுத்த மாதம், பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு அங்கு மாற்றப்பட உள்ளது.

திருப்பூர் சாயப்பட்டறை தொடர்பான வழக்குகளை சூழல் இழப்பீட்டு ஆணையம் விசாரித்து வந்தது. அதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, அதில்நிலுவையில் இருந்த 1 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளை, பசுமை தீர்ப்பாயத்தில் 3-வதுஅமர்வை தொடங்கி விசாரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 3-வது அமர்வை தொடங்க மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அதற்கு தேவையான இடங்கள் கல்சா மஹாலில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது தென்னிந்திய அமர்வின் பதிவாளர் ஆர்.மோகன்ராஜ் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x