Last Updated : 16 Aug, 2022 08:06 PM

 

Published : 16 Aug 2022 08:06 PM
Last Updated : 16 Aug 2022 08:06 PM

புதுக்கோட்டையில் ஜல் ஜீவன் மிஷன் முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: ஜல் ஜீவன் மிஷன் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை வயல் பிளானஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முத்துசாமி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-ல் ரூ.96.60 லட்சம் மதிப்பில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்துக்கான ஒப்பந்தம் எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்தினோம். இதற்காக எங்கள் நிறுவனத்துக்கு ரூ.64 லட்சத்துக்கு 40 ஆயிரத்து 427 வழங்க வேண்டியதுள்ளது. இப்பணத்தை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: புதுக்கோட்டை மாவட்ட ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிக்கான ஒப்பந்தம் வெளிப்படையாக வழங்கப்படவில்லை. 3 பேர் ஒப்பந்தம் கேட்ட நிலையில் மனுதாரர் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் வழங்கியதில் விதிமீறல் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் திட்ட இயக்குனர் காளிதாசன், செயற்பொறியாளர் ஜோஸ்பின் நிர்மலா, உதவி செயற்பொறியாளர் முகமது நிஜாமுதீன், உதவி திட்ட அலுவலர் தமிழ்ச்செல்வி, கண்காணிப்பாளர் மாணிக்கவாசகம், உதவியாளர் ராஜா கண்ணன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிக்கான ஒப்பந்தம் தமிழ்நாடு ஒப்பந்த விதிப்படி வெளிப்படையாக நடைபெறவில்லை. இதற்காக மனுதாரர் நிறுவனத்துக்கு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்துக்கான ஒப்பந்தம் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட அப்போதைய ஆட்சியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஆக. 23-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x