Last Updated : 12 Oct, 2016 08:57 AM

 

Published : 12 Oct 2016 08:57 AM
Last Updated : 12 Oct 2016 08:57 AM

மூளைச் சாவு அடைந்த அழகியல் சிகிச்சை நிபுணரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச் சாவு அடைந்த சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை அழகியல் துறைத் தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ரத்னவேல் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. தோல் மட்டும் அவர் தொடங்கிய தோல் வங்கிக்கு தானமாக கொடுக்கப்பட்டது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை அழகியல் துறைத் தலைவ ராக இருந்தவர் டாக்டர் ஜி.ஆர்.ரத்னவேல் (48). திருச்சியில் நடந்த தோல் நோய் குறித்த மாநாட்டை முடித்துவிட்டு, கடந்த 7-ம் தேதி திருச்சி உச்சி பிள்ளையார் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழு வினர் பரிசோதனை செய்து பார்த்ததில், மூளையில் ரத்தக்குழாய் வெடித்து ரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்தது.

சுயநினைவு இழந்த நிலையில் இருந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 9-ம் தேதி மூளைச் சாவு அடைந்தார். கடந்த 10-ம் தேதி குடும்பத்தினரின் விருப்பப்படி அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள், தோல் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

அதன்பின், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப் பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. நேற்று முன்தினம் சென்னை காசிமேட்டில் ரத்னவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் (பொறுப்பு) பொன்னம்பலம் நமச்சிவாயம், ஆர்எம்ஓ ரமேஷ் ஆகியோர் கூறியதாவது:

திறமையான டாக்டர் ஜி.ஆர்.ரத்னவேல். தோல் நோய் சிகிச்சை நிபுணரான இவர், அரசு மருத்துவ மனைகளிலேயே முதல் முறையாக இந்த மருத்துவமனையில் அழகியல் துறையை தொடங்கினார். இந்த ஆண்டு தோல் குறித்த சிறப்பு படிப்பையும் ஆரம்பித்தார். கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி இந்தியாவிலேயே அரசு மருத்துவமனை களில் முதல் முறையாக தீக்காயங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தோல் வங்கியை தொடங்கினார்.

எப்போதும் அழகாகவும், இளமை யாகவும் இருப்பதற்கான போடாக்ஸ் என்ற மருந்தை ஊசி மூலம் போடுவது, தலையில் முடி நடுவது போன்ற சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்றவர். இதுபோன்ற சிகிச்சைகளை அதிக அளவில் செய்துள்ளார். தானம் செய்யப்பட்ட ரத்னவேல் உடல் உறுப்பு கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுபவர்களுக்கு பொருத்தப்பட்டது. தோல் மட்டும் ஸ்டான்லி மருத்துவ மனையில் அவர் தொடங்கிய தோல் வங்கிக்கு தானம் கொடுக்கப்பட்டது. ரத்னவேல் மறைவு அழகியல் துறைக்கு மட்டுமின்றி மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x