Published : 12 Aug 2022 04:11 PM
Last Updated : 12 Aug 2022 04:11 PM

ஜெய்பீம் | “ஆதிக்க சக்திகளின் முயற்சி பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சி” - கே.பாலகிருஷ்ணன்

சென்னை: "நல்ல கதையம்சம் கொண்ட, மனித உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் திரைப்படங்களை அச்சமின்றி தயாரிக்கும் சூழல் நிலவ வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெய்பீம் திரைப்படம் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றியடைந்தது. அதனால் ஆத்திரமடைந்த சாதிய, வகுப்புவாத சக்திகள், திரைப்பட குழுவின் மீது குற்ற வழக்குப் பதிவு செய்தார்கள். அதற்கு காரணமாக சொல்லப்பட்ட ஒரு காலண்டர் காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட அவர்களின் ஆத்திரம் அடங்கவில்லை. படத்தின் இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா என எல்லோர் மீதும் வழக்கு பதிய நீதிமன்றத்தில் முறையிட்டார்கள்.

இந்த நிலையில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்த உயர் நீதிமன்றம் ஜெய்பீம் தொடர்பான வழக்கினை ரத்து செய்துள்ளது வரவேற்கதக்கது. நல்ல கதையம்சம் கொண்ட, மனித உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் திரைப்படங்களை அச்சமின்றி தயாரிக்கும் சூழல் நிலவ வேண்டும். அதற்கு எதிரான ஆதிக்க சக்திகளின் முயற்சி பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஜெய்பீம் திரைப்படத்தில், வன்னியர் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக கூறி, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி படத்தின் இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேலுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x