Published : 12 Aug 2022 04:49 AM
Last Updated : 12 Aug 2022 04:49 AM

போதைப் பொருள் தடுப்பில் கடமை தவறும் அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதில், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.படம்: ம.பிரபு

சென்னை: போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுப்பதில் கடமையை செய்யத் தவறும் அதிகாரிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். போதைப் பொருள் தடுப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ திட்டத்தின் தொடக்க விழா, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

முதல்வர் ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த உறுதிமொழியை ஏற்றனர். இந்த முயற்சியின் மூலம், ஒரே நாளில் அதிகபட்ச நபர்களால் உறுதிமொழி எடுக்கப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் மற்றும் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகள் முதல்வரிடம் வழங்கின.

அதைத் தெடார்ந்து, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆகியவற்றை இணைத்து புதிதாக உருவாக்கப் பட்டுள்ள ‘அமலாக்கப் பணியகம் – குற்றப்புலனாய்வு துறை’ என்ற தனிப் பிரிவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், போதை ஒழிப்பு குறித்த தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை உறுதி செய்யும் வகையில், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, தன்னார்வலர்கள், அமலாக்கப் பணியகம் – குற்றப்புலனாய்வு துறை இணையதளம் வாயிலாக பங்கேற்கும் 30 மணி நேர விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் முதல்வர் தொடங்கிவைத்தார். மேலும், போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார குறும்படத்தையும் வெளியிட்டார்.

பின்னர் முதல்வர் பேசியதாவது:

கவலை அளிக்கும் மனநிலையில்தான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் நாளுக்குநாள் போதை மருந்துகளின் பயன்பாடும், அதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை நினைக்கும் போது எனக்கு கவலையும், வருத்தமும் அதிகமாகிறது. இதைத் தடுக்க இரண்டு வழிகள் உள்ளன. போதை மருந்து நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, விற்பவர்களை கைது செய்வது ஒன்று. அடுத்தது, போதை மருந்துகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்துவது.

முதல் வழி சட்ட வழி. அதை அரசும், காவல்துறையும் கவனிக்கும். இரண்டாவது வழியான விழிப்புணர்வு வழியில் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் முடியும். சட்டத் தின் வழியில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான திட்டங்களை தீட்டியுள்ளோம். கஞ்சா விளைவிப்பதை தடுப்பது, அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதை தடுப்பது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

இது தொடர்பான நடவடிக்கைகளை கடுமையாக்க, சட்டங்களை திருத்த உள்ளோம். சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பு, போதை மருந்து விற்பவர்களின் சொத்துகள் பறிமுதல், சைபர் செல் உருவாக்கம் என பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு தனியான உளவுப்பிரிவு ஏற்படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கையில் நான் சர்வாதிகாரிபோல் செயல்படுவேன் என உறுதி அளித்துள்ளேன்.

சட்டம் தன் கடமையை உறுதியாகச் செய்யும். கடமையை செய்யத் தவறும் அதிகாரிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது. போதை மருந்து விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு எந்தவித தயக்கமும் காட்டாது. போதைப் பொருளானது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு போய்ச் சேரும் சங்கிலியை நாம்உடைக்க வேண்டும். போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை திருத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. போதை போன்ற சமூக நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ஒட்டுமொத்த சமூகமும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு போதை தான் தூண்டுகோலாக இருக்கிறது. போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுத்தல் என்பது மக்கள் இயக்கமாக செயல்பட வேண்டும். போதைப் பொருள் விற்க மாட்டோம் என வியாபாரிகள், கடைக்காரர்கள் உறுதி எடுக்க வேண்டும். போதையின் தீமையை மருத்துவர்கள் பரப்புரை செய்ய வேண்டும்.

இதில் பெற்றோர், ஆசிரியர்களின் பங்கு மிகமிக முக்கியமானது. பிள்ளைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அவர்களிடம் மனம்விட்டு பேசுங்கள். இயல்பாக பழகுவதுடன், நண்பர்களாக அணுகுங்கள். எக்காரணத்தை கொண்டும் குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள்.

இதே கடமை ஆசிரியர்களுக்கும் உண்டு. நீங்கள் கண்டிப்புடன், அதேநேரம் கனிவுடன் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகளிடம் படிப்பைத் தாண்டியும் பல நல்ல விஷயங்களை சொல்லுங்கள். சோர்வாக இருக்கும் மாணவ, மாணவிகளை அழைத்துப் பேசுங்கள். பெற்றோர் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோராகவும் இருந்து மாணவச் சமுதாயத்தை வளர்த்தால், போதை போன்ற தவறான பழக்கங்களில் யாரும் ஈடுபட மாட்டார்கள். போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பரப்புரையில் மக்கள் பிரதிநிதிகள் ஈடுபட வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தருமபுரியில் இருந்து பாமக சட்டப்பேரவை கட்சித் தலைவர் ஜி.கே.மணி காணொலி வாயிலாக பங்கேற்று அரசின் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x