Published : 10 Aug 2022 11:09 AM
Last Updated : 10 Aug 2022 11:09 AM

ஜிப்மர் செவிலியர்கள் தேர்வு | தமிழகம், புதுச்சேரி புறக்கணிப்பு: வைகோ கண்டனம்

வைகோ | கோப்புப் படம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்கள் திட்டமிட்டு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன, இரு மாநில செவிலியர்களும் தேர்வு எழுத இயலாதபடி மத்திய அரசு திட்டமிட்டு புறக்கணித்து உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மத்திய அரசின் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், செவிலியர் காலிப் பணியிடங்களுக்காக 2022, ஜூலை 13 ஆம் தேதியிட்ட வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பின்படி 139 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது.

அதன்படி 21.07.2022 முதல் 11.08.2022 அன்று வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் 28.07.2022 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்களை திட்டமிட்டு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.

இது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செவிலியர்கள் தேர்வு எழுத இயலாதபடி மத்திய அரசு திட்டமிட்டு புறக்கணித்துள்ளது.

எனவே மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ள இணையதள சேவையை குறிப்பிட்ட தேதி வரை செவிலியர்கள் விண்ணப்பிக்கும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுதும் மையங்களை இணையதளத்தில் உடனடியாக இணைக்கும்படி மத்திய அரசை வலியுறுத்துகின்றேன்." என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x