Published : 08 Aug 2022 05:20 AM
Last Updated : 08 Aug 2022 05:20 AM

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக ஆக.12-க்குள் மக்கள் கருத்துகளை அனுப்பலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக வரும் 12-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலர் க.பணீந்திர ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு. சமீபகாலங்களில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். வரன்முறையற்ற ஆன்லைன் விளையாட்டுகளால் கற்றல் குறைபாடுகள், ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாகவும் அரசுக்கு தெரியவந்துள்ளது.

எனவே, ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக, தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவின் அறிக்கை, அரசின்பரிசீலனையில் உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்வது தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், இளையதலைமுறையினர், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களிடம் இருந்து கருத்து கேட்க அரசு முடிவெடுத்துள்ளது.

எனவே, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது தொடர்பான கருத்துகளை ‘homesec@tn.gov.in’ என்ற மின்னஞ்சல் முகவரியில் வரும் 12-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

மேலும், ஆன்லைன் விளையாட்டுகள் பற்றிய கருத்துகளை நேரடியாகப் பகிர விரும்பும் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந்தித்து தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க நாளை (ஆக. 9) மாலை5 மணிக்குள் தங்களது வேண்டுகோளை மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

கருத்து கேட்பு கூட்டம் வரும் 11-ம் தேதி மாலை 4 மணி முதல்நடைபெறும். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனி நேரம் ஒதுக்கப்படும். நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும்பங்கேற்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x