Published : 17 Oct 2016 08:41 AM
Last Updated : 17 Oct 2016 08:41 AM

‘இந்து’ தமிழ் இணையதளத்தில் வெளிவரும் ‘அன்பாசிரியர்’ தொடர் எதிரொலி: அரசுப் பள்ளிகளுக்கு கொடுத்து உதவிய கரங்கள்

‘தி இந்து’ தமிழ் இணையதளத்தில் வெளியாகும் ‘அன்பாசிரியர்’ இணையதள செய்தியைப் பார்த்து, தொடர்புடைய அரசுப் பள்ளிகளுக்கு ஏராளமான தொண்டு உள்ளம் படைத்தோர் உதவிகளை செய்து வருகின்றனர்.

மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும் அறிமுகம் செய்து வைப்பதுமே ‘தி இந்து’ தமிழ் இணையதளத்தில் (http://tamil.thehindu.com) வெளிவரும் ‘அன்பாசிரியர்’ தொடரின் நோக்கம்.

இந்தத் தொடரில் அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையையும் தவறாமல் குறிப்பிடுகிறோம். இதைத் தொடர்ந்து படித்துவரும் ‘தி இந்து’ வாசகர்கள், ஆசிரியர் களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

அரசுப் பள்ளிகளுக்கு அருங்கொடை அளித்து, அவர்களின் பெருங்கனவுகளை நிறைவேற்றிய ‘தி இந்து’ வாசகர்கள் அளித்த உதவிகளின் தொகுப்பு:

தாகம் தீர்த்த கலந்தர்!

‘அன்பாசிரியர் 14 - பார்வதி ஸ்ரீ: இணை யத்தில் தமிழ் வளர்க்கும் ஆசிரியர்!’ தொடரில் சேலம், கந்தம்பட்டி அரசு தொடக் கப் பள்ளிக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, தண்ணீர் வசதியைக் கொண்டு வர வேண்டும் என்பதை தன் எதிர்காலத் திட்டமாகக் கூறியிருந்தார் ஆசிரியர் பார்வதி ஸ்ரீ.

இந்நிலையில், ‘தி இந்து’ வாசகர் சையத் மு.கலந்தர், பள்ளிக்குத் தேவையான ஆழ் துளைக் கிணற்றையும், தண்ணீர் டேங்கை யும் அமைக்க சுமார் ரூ.80 ஆயிரம் அளித்துள் ளார். துபாயில் பணிபுரியும் கலந்தர் தன் பெற்றோர் நினைவாக ஆழ்துளைக் கிணற்றையும், தண்ணீர் டேங்கையும் அமைத்துக் கொடுத்ததாக தெரிவிக்கிறார்.

அரசுப் பள்ளிக்கு லேப்டாப்

‘அன்பாசிரியர் 16 - சிலம்பரசி: பிளாஸ்டிக் மறுசுழற்சி வித்தகர்!’ அத்தியாயத்தில் யாராவது எங்களின் கணினி வழிக் கற்ற லுக்கான தொடக்கத்தை விதைத்துச் செல் வார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருப் பதாகச் சொல்லியிருந்தார் ஆசிரியர் சிலம்பரசி.

இந்நிலையில், பெயரை வெளியிட விரும்பாத ‘தி இந்து’ வாசகி, பள்ளிக்கு தேவையான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினியை சோழங்கநத்தம் அரசுப் பள்ளிக்கு நேரில் சென்று வழங்கியிருக்கிறார். திருச்சியைச் சேர்ந்த இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.

“என்னுடைய பெயரை இந்த உலகத் துக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்ப வில்லை. கொடுக்கும் நிலைமையில் எங்களை இறைவன் வைத்திருக்கிறார். உண்மையிலேயே சேவை செய்யும் ஆசிரியர்கள்தான் உயர்ந்தவர்கள்” என்றார் அந்த வாசகி.

ஸ்மார்ட் வகுப்பறை நிறுவ உதவி

‘அன்பாசிரியர் 19: புகழேந்தி - கிராமப்புற மாணவர்கள் கொண்டாடும் ஆசான்!’ மூலம் மாறிவரும் கல்விச் சூழலுக்கு ஏற்ப, இணையம் மூலம் கற்பிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய அன்பாசிரியர் புகழேந்தி, அவர் வேலை பார்க்கும் மன்னம்பாடி அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த அத்தியாயத்தைப் படித்த கத்தார் நாட்டில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத ‘தி இந்து’ வாசகர், பள்ளிக்கு உதவி செய்திருக்கிறார். கணினி ஏற்கெனவே இருப்பதால், ஸ்மார்ட் வகுப் பறைக்கு தேவையான ரூ.24 ஆயிரம் மதிப்பிலான புரொஜெக்டர் வாங்கித் தந்துள்ளார் என்று நம்மிடம் மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் புகழேந்தி.

அரசுப் பள்ளிக்கு 4 கணினிகள்

‘அன்பாசிரியர் 25: தங்கராஜ்- உழைப் போடு ஊதியத்தையும் தரும் ஆசான்!’ தொடரில், குறைவான விலையில் அல்லது பயன்படுத்திய நிலையில் இருக்கும் கணினிகள் கிடைத்தால் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்க முடியும் என்பதால் அவற்றை வாங்கும் முயற்சியில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார் ஆசிரியர் தங்கராஜ்.

இந்நிலையில், இந்த அத்தியாயத்தைப் படித்த பெயர் குறிப்பிட விரும்பாத, பன்னாட்டு வங்கியில் பணியாற்றும் ‘தி இந்து’ வாசகர்கள் இருவர் மற்றும் அவர் களது நண்பர்கள் இணைந்து, அன்பாசிரியர் தங்கராஜ் பணிபுரியும் நாமக்கல், ஊத்துப்புளிக்காடு அரசு ஆரம்பப் பள்ளிக்கு 4 கணினிகள் மற்றும் 6 மேசைகளை இலவசமாக வாங்கிக் கொடுத்துள்ளனர்.

எங்களின் பெருங்கனவை, ‘தி இந்து அன்பாசிரியர்’ தொடர் நிறைவேற்றிவிட்டது என்று மகிழ்கிறார் அன்பாசிரியர் தங்கராஜ்.

‘அன்பாசிரியர் 27: செல்வக்கண்ணன்- ரூ.40 லட்சம் திரட்டி அரசுப் பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர்’ தொடரை வெளிநாட்டில் இருந்து படித்த பள்ளியின் முன்னாள் மாணவர், தன் நண்பர்களோடு இணைந்து பள்ளிக்கு உதவியிருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார் அன்பாசிரியர் செல்வக்கண்ணன். “கட்டுரை வெளியான நாளில் இருந்து, தூங்கும் நேரம் தவிர்த்து இப்போது உங்களிடம் பேசும் வரை, ‘தி இந்து’ வாசகர்களிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இத்தனை வருட உழைப்புக்கான அங்கீகாரம் ஒரே நேரத்தில் கிடைத்துவிட்டதுபோல தோன்றுகிறது.

சோழங்கநத்தம் அரசுப் பள்ளியில் மடிக்கணினியை இயக்கும் மாணவி.

எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவரான பாரதிராஜா இப்போது இங்கிலாந்தில் பணிபுரிகிறார். ‘தி இந்து’ தமிழ் இணையதளத்தில் வெளியான அன்பாசிரியர் தொடரைப் படித்தவர், நாம் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி, ஊரில் இருக்கும் தன் நண்பர்கள் சிவா மற்றும் ரமேஷிடம் பேசியிருக்கிறார். முன்னாள் மாணவர்கள் மூவரும் இணைந்து பள்ளிக்கு என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டனர். ஸ்மார்ட் வகுப்பறைக்கு டைல்ஸ் ஒட்ட வேண்டும் என்று கூற, உடனே 20 ஆயிரம் ரூபாயை வழங்கினர்.

அதேபோல சதீஷ்குமார் என்னும் தொழிலதிபர் தன் நண்பர்களுடன் இணைந்து ரூ.45 ஆயிரம் வழங்கினார். செய்தியைப் படித்த தனியார் பள்ளிகளுக்கு மர வேலை செய்துகொடுக்கும் நண்பர், ரூ.25 ஆயிரம் செலவில், இலவசமாக அலமாரிகள் செய்து தந்துள்ளார். பள்ளி மாணவர்களின் பெற்றோர் சாந்தகுமார், ராமச்சந்திரன், முத்துராமலிங்கம் ஆகியோர் கட்டமைப்புக்கான மணல் செலவை ஏற்று, 1 லோடு மணலை இலவசமாக வழங்கியுள்ளனர். பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் பள்ளிக்கு உதவும்போது நம் மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டி ருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. இவை அனைத்தையும் சாத்தியமாக்கிய ‘தி இந்து’வுக்கு நன்றி என்று நெகிழ்கிறார் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.

இந்தத் தகவல்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் ‘தி இந்து’ பெருமிதம் கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x