Last Updated : 07 Aug, 2022 08:01 PM

 

Published : 07 Aug 2022 08:01 PM
Last Updated : 07 Aug 2022 08:01 PM

புதுச்சேரி | மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ரூ.11,000 கோடி பட்ஜெட்

புதுச்சேரி: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நடப்பாண்டு ரூ. 11 ஆயிரம் கோடிக்கான முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் அனுமதிக்காக புதுச்சேரி அரசு காத்துள்ளது.

சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் ஆளுநர் தமிழிசை உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார். சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும் போது பூஜ்ஜிய நேரத்தில் அரசு செயலர்கள், துறை தலைவர்கள் பேரவையில் இருக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை தலைமைச்செயலர் ராஜீவ் வர்மா அனைவருக்கும் அனுப்பியுள்ளார்.

ஏனெனில் பேரவை நடக்கும் போது அரசு செயலர்கள், துறை தலைவர்கள் பலரும் பேரவையில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு பேரவைத்தலைவர் அறிவுறுத்தலையடுத்து இவ்வுத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எப்போது கிடைக்கும் பட்ஜெட்டுக்கான ஒப்புதல்?:

கூட்டத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.11,000 கோடி முழு பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி தரவில்லை.

இதுதொடர்பாக ஆளும் அரசின் கூட்டணிக்கட்சியான அதிமுகவின் கிழக்கு மாநில செயலர் அன்பழகன் கூறுகையில், "புதுச்சேரியில் ஆளுநர் தலைமையில் கூட்டப்பட்ட திட்டக்குழு கூட்டத்தில் இவ்வாண்டு பட்ஜெட், மத்திய அரசின் நிதியுதவி, மாநில அரசின் வருவாய் மற்றும் கடன் பெறுதல் ஆகியவற்றை உள்ளடக்கி சுமார் 11 ஆயிரம் கோடி என இறுதி செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் நிதியுதவி தோராயமாக 2,900 கோடி என முடிவு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் போடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசின் நிதியுதவியாக ரூ.1,729 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்பொழுது கூடுதலாக மாநில அரசு, சுமார் 1,200 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதியுதவியை எதிர்பார்த்து இவ்வாண்டு பட்ஜெட்டிற்கான தொகையை இறுதி செய்துள்ளது.

மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி உள்ள நிலையில் மத்திய அரசின் கூடுதல் நிதியான ரூபாய் 1,200 கோடியை, பட்ஜெட் இறுதி வரைவுக்கு முன்பே அனுமதி வாங்குவது சிறந்த ஒன்றாகும். ஆனால் இந்த தொகையை மத்திய அரசு இன்று வரை ஏற்காததால் இவ்வாண்டு 11 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டிற்கு இன்று வரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது.

கடந்த கால காங்கிரஸ், திமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டிற்கு மத்திய அரசின் அனுமதியில்லாமல் தேக்க நிலை ஏற்பட்டது போன்று, தற்பொழுதும் அது போன்ற நிலை நமது அரசுக்கு ஏற்படாமல் இருக்க ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இச்சூழலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை டெல்லி சென்றுள்ளார். குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்த இவர், மேலும் பட்ஜெட்டுக்கு உரிய அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும், முக்கிய அமைச்சர்களையும் அவர் சந்திப்பார் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x