Last Updated : 05 Aug, 2022 06:46 PM

 

Published : 05 Aug 2022 06:46 PM
Last Updated : 05 Aug 2022 06:46 PM

மேட்டூர் அணையில் இருந்து 1.80 லட்சம் கன அடி நீர் திறப்பு: காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளம்.

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில், கடந்த 20 நாட்களில் 90 டிஎம்சி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர், காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 16-ம் தேதி மேட்டூர் அணை நிரம்பி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 20 நாட்களாக அணை நிரம்பியிருக்கும் நிலையில், இந்த 20 நாளில் அணைக்கு 120 டிஎம்சி நீர் வந்துள்ளது. அணையில் இருந்து 90 டிஎம்சி உபரி நீராக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.

1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: கர்நாடகா மற்றும் கேரளா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கெனவே, அந்த அணைகள் நிரம்பி உள்ளதால், இவ்விரு அணையில் இருந்தும் கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து இருந்தது. இன்று காலை 8 மணி வரை விநாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து, மதியம் 12 மணிக்கு விநாடிக்கு ஒரு லட்சத்து 81 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீரும், 16 கண் மதகு வழியாக விநாடிக்கு ஒரு லட்சத்து 57 ஆயிரம் கனஅடி என மொத்தம் காவிரி ஆற்றில் விநாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 120.05 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.55 டிஎம்சி-யாக உள்ளது. கடந்த ஜூலை 16ம் தேதி மேட்டூர் அணை நிரம்பி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 20 நாட்களாக அணை நிரம்பியிருக்கும் நிலையில், இந்த 20 நாளில் அணைக்கு 120 டிஎம்சி நீர் வந்துள்ளது. அணையில் இருந்து 90 டிஎம்சி உபரி நீராக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.

அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக்கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி நீர் வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும், அணைக்கு வரும் நீரின் அளவு குறித்து கண்காணித்து வருகின்றனர். காவிரி கரையோர பகுதிகளில் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்க, செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி நீரால், தொடர்ந்து கரையோர பகுதிகளில் காவல் துறை, தீயணைப்பு துறை, வருவாய் துறை மற்றும் நீர் வளத்துறை அதிகாரிகள் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x