

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதால், பவானி ஆற்றில் 7,350 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் 105 அடி வரை, 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும். நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 28-ம் தேதி 100 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, ஜூலை மாத இறுதிவரை 100 அடிவரை நீரினைத் தேக்கி வைக்க முடியும். இந்த உயரத்தைத் தொட்டதும், பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படும். இருப்பினும், அணையில் கூடுதலாக நீரினைத் தேக்கும் வகையில், அப்போது உபரி நீர் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால், அணைக்கான நீர்வரத்து அதிகரித்து, இன்று காலை அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இதையடுத்து பவானிசாகர் அணையில் இருந்து இன்று காலை முதல் உபரி நீர் திறக்கப்படுகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் காலை 11 மணி நிலவரப்படி 102 அடியாகவும், நீர் இருப்பு 30.31 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 7359 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து, பவானி ஆற்றில் உபரிநீராக 7350 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியது: பவானிசாகர் அணை விதிமுறைகளின்படி, ஜூலை 31-ம் தேதி வரை, அணையில் 100 அடிவரை நீரினைத் தேக்கி வைக்கலாம். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், அக்டோபர் 31-ம் தேதி வரை 102 அடி வரையிலும், நவம்பர் மாதம் முதல் அடுத்து வரும் மாதங்களில் 105 அடி வரை நீரினைத் தேக்கி வைக்கலாம்.
தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதால், அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள ஒன்பது மதகுகளில் உபரி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கான நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியை தொடுமானால், அணையின் மேல்மதகுகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு, கூடுதலாகவும், விரைவாகவும் உபரிநீர் வெளியேற்றப்படும் என்றனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில், வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பவானி ஆற்றில் குளிக்க, மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல், வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.