Published : 05 Aug 2022 11:04 AM
Last Updated : 05 Aug 2022 11:04 AM

நாட்டுப்பற்றையும் தேச ஒற்றுமையையும் வளர்க்க வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுங்கள்: இபிஎஸ்

சென்னை: "அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், அவரவர் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி நாட்டுப் பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும்" என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் வருகின்ற 15.08.2022 அன்று கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக “சுதந்திர தின அமுதப் பெருவிழா” என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், வரலாற்றின் சில குறிப்புகளைப் பகிர்ந்துகொண்ட பாரதப் பிரதமர் , இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு , முதல் தேசியக் கொடியை
ஏற்றி வைத்த நிகழ்வையும் நினைவுகூர்ந்தார்.

இது தொடர்பாக பாரதப் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் “சுதந்திர தின அமுதப் பெருவிழா” என்ற பெயரில் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், தங்களது வீடுகளில் தேசியக் கொடி – என்ற இயக்கத்தின் மூலம் மேலும் தேசப்பற்றை வலுப்படுத்துவோம் என்றும், ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15-ஆம் நாள் வரை, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிடுங்கள் என்றும், இந்த இயக்கம் தேசியக் கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் பறக்கவிடப்படும் தேசியக் கொடியை, இரவில் இறக்குவதற்கு தேவையில்லை என்றும், மூன்று நாட்களும் பறந்தவாறே இருக்கட்டும் என்றும், அதற்கேற்றவாறு விதிகள் திருத்தப்பட்டுள்ளன என்றும்
பிரதமர் தெரிவித்துள்ளார்.

தேசியக் கொடி என்றவுடன் நமது நினைவுக்கு வருவது “கொடி காத்த குமரன்” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திருப்பூர் குமரன்தான். அந்நியர் ஆட்சியில், நமது தேசியக் கொடியை காப்பதற்காக தனது இன்னுயிரைத் தியாகம்
செய்த கொடி காத்த குமரன் முதல் அனைத்து விடுதலைப் போராட்டத் தியாகிகளையும் தீரர்களையும் 75-ஆவது சுதந்திர தின நன்னாளில் நினைவு கூர்வோம்.

அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், அவரவர் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி நாட்டுப் பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x