Published : 04 Aug 2022 07:09 AM
Last Updated : 04 Aug 2022 07:09 AM

செங்கல்பட்டு | பாரம்பரிய முறையில் கொசு ஒழிப்புக்காக பொதுமக்களுக்கு நொச்சி நாற்று வழங்க கோரிக்கை

செங்கல்பட்டு: கொசு பெருக்கத்தை ஒழிக்க பொதுமக்களுக்கு நொச்சி நாற்று வழங்கும் திட்டத்தை, அரசு மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பருவ கால மாற்றங்களின்போது பொதுமக்களுக்கு, டைபாய்டு, டெங்கு, சிக்கன் குனியா போன்ற பல வகையான காய்ச்சல் பரவுவது இயல்பு. அது போன்ற சமயங்களில் அதிகரிக்கும் கொசு காரணமாக, நோய் பரவும் தன்மையும் அதிகரிக்கிறது.

கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தினால், டெங்கு உள்ளிட்ட பலவிதமான நோய் பரவலையும் தடுக்க முடியும். கொசுக்களை கட்டுப்படுத்த பல்வேறு முறைகள் கையாளப்பட்டாலும், பக்கவிளைவு இல்லாமல் மூலிகை வளர்ப்பால் கொசுக்கள் பெருக்கத்தை தடுக்க முடியும்.

வீடுகளை சுற்றிலும் நொச்சி செடியால் உயிர்வேலி அமைக்கும் வழக்கத்தை, நம் முன்னோர் பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்தனர்.

நொச்சி செடி வளர்ப்பதன் நன்மைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் வாயிலாக அரசு திட்டமிட்டது. இதற்காக, ஊராட்சிகளில் நாற்றுப் பண்ணை அமைத்து, நொச்சி நாற்று உற்பத்தி செய்து கிராமங்களில் நடவு செய்யும் திட்டம் கரோனா பரவலுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

அரசு சார்பில் பொதுமக்களுக்கு கட்டி தரப்படும் தொகுப்பு வீடுகள் திட்ட பயனாளிகளுக்கு, தலா இரண்டு நொச்சி நாற்றுகள் வழங்கப்பட்டன.

ஆனால், கரோனா காரணமாக நொச்சி வளர்ப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, அவ்வப்போது மழை பெய்வதால், கொசுக்கள் உற்பத்தி மற்றும் நோய் பரவும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், நொச்சி உள்ளிட்ட மூலிகை செடிகள் வளர்க்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு முனைப்பு காட்ட வேண்டும். விரைவில், முழு வீச்சில் நொச்சி நாற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கோபால் கூறியதாவது: இயற்கை முறையில் கொசுவை விரட்டுவதற்கு நொச்சி செடி சிறந்தது. சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்ற நோய்களைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களுக்கு நொச்சி இலையின் வாசனை ஆகாது. அனைத்து வகை மண்ணுக்கும் இந்த செடி வளரும்.

கரோனா முடக்கம் காரணமாக அத்திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது கொசு தொல்லை மீண்டும் அதிகமாக உள்ளதால், நொச்சி செடி வழக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்களிடம் விழிப்புணர்வு

ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நொச்சி வளர்த்தால் கொசு ஒழிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காக அரசு பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நொச்சி நாற்று வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது நொச்சி நாற்று வழங்கும் திட்டம் நடைமுறையில் இல்லை. இந்த நொச்சி செடி குறைந்த விலை என்பதால் தனியார் நர்சரிகளில் கிடைக்கும் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x