Last Updated : 23 Oct, 2016 03:02 PM

 

Published : 23 Oct 2016 03:02 PM
Last Updated : 23 Oct 2016 03:02 PM

உரம், பூச்சிக்கொல்லி விற்பனையாளர்களுக்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் புதிய பட்டயப் படிப்பு அறிமுகம்

உரம், பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள் வேளாண்மை கல்வியறிவு பெற வேண்டும் என்பதற்காக, நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் புதிய பட்டயப் படிப்பைத் தொடங்கியுள்ளது.

உரம், பூச்சிக்கொல்லி விற்பனை செய்பவர்களுக்கு வேளாண்மை குறித்த அடிப்படைக் கல்வியறிவு அவசியம் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்தது. வேளாண்மை குறித்த கல்வியறிவு இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு சரியான ரசாயன மருந்துகளைப் பரிந்துரைக்க முடியும் என்பதே அதன் நோக்கம்.

இந்நிலையில், கல்வியறிவு இல்லாத உர விற்பனையாளர்களும் வேளாண் அறிவைப் பெறும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் புதிய பட்டயப் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. வேளாண்மைக்கு உரம், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு எந்த அளவுக்கு இருக்க வேண்டும், வேளாண் உற்பத்தியை சரியான முறையில் அதிகப்படுத்துவது எவ்வாறு என்பன உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில் பாடத்திட்டத்தை உருவாக்கி, மத்திய வேளாண் அமைச்சக ஒப்புதலோடு அதை செயல்படுத்தவும் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குநரக இயக்குநர் (பொறுப்பு) பெ.சாந்தி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

2005-ல் தொலைதூரக் கல்வி மையம் தொடங்கப்பட்டது. வேளாண்மைக்கு இன்றியமை யாததாக இருக்கும் உரத்தின் பயன்பாடுகள் குறித்த கல்விக்காக, வேளாண் இடுபொருட்கள் பட்டயப்படிப்பு (Diploma in agri inputs) என்ற ஒரு வருட படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளோம். உரம், பூச்சிக்கொல்லி விற்பனை உரிமம் புதுப்பிக்க வேளாண் கல்வியறிவு அவசியம் என்ற அரசின் நிலைப்பாட்டையொட்டி, நாட்டிலேயே முதல்முறையாக இந்த பட்டயப் படிப்பை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கொண்டுவந்துள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி ஆலோசனையின்பேரில் பாடத்திட்டம் தயாரித்து, அரசின் அனுமதியோடு இப்போது செயல்பாட்டுக்கும் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் தமிழகத்தில் 12,000-க்கும் மேற்பட்ட உரம், பூச்சிக்கொல்லி விற்பனை யாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

10-ம் வகுப்பு படித்திருந்தாலே (தேர்ச்சி/ தோல்வி) இந்த ஒரு வருட பட்டயப் படிப்பை தொடரலாம். 2 பருவங்களாக, 48 வாரங்களில் சனிக்கிழமைதோறும் தமிழ்வழியில் வகுப்பு நடக்கும்.

ஒரேமுறை ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 9 கல்லூரிகள், 15 ஆய்வு மையங்களில் இந்த படிப்பை தொடரலாம். இதுவரை 1,800 பேர் விண்ணப்பித்துள்ளனர். இப்பட்டயப் படிப்பின் சான்றிதழை வைத்து உரம் விற்பனையாளர்கள் எளிதில் உரிமங்களை புதுப்பித்துக்கொள்ளலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x