Published : 02 Aug 2022 04:42 PM
Last Updated : 02 Aug 2022 04:42 PM

“பாஜகவின் டிஎன்ஏவுக்கே எதிரான திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை” - அண்ணாமலை

சென்னை: " திமுகவின் பேச்சு பாஜகவுக்கு நேர் எதிராக உள்ளது. முதல்வரை வைத்துக் கொண்டு கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் மாநிலத்திற்கு சுயாட்சி வேண்டும் என்று பேசுகின்றனர். இவையெல்லாம் பாஜகவின் டிஎன்ஏவுக்கே எதிரானது. எனவே, எந்த காலக்கட்டத்திலும்கூட, இப்படி பேசுகின்ற திமுகவோடு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ஆவின் பால் விஷயத்தில், சமூக வலைதளங்களில் வரக்கூடிய படங்களைப் பார்க்கின்றபோது, நம்பிக்கை எல்லாம் தாங்கி இருக்கக்கூடிய அரசு என்ற வார்த்தையின் மீது நம்பிக்கையின்மை வருகிறது. ஆனால், இந்த விவகாரம் குறித்து இதுவரை ஆவின் நிர்வாகம், பால்வளத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் விளக்கம் அளிக்காமல் இருப்பது ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் அளிக்கிறது.

தமிழ்நாட்டைப் போன்று ஒரு மூன்று நான்கு கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொண்டு அந்தக் கூட்டணியை நிர்வகிப்பதே பிரச்சினை என்று பாஜக சொல்லாது. பல இடங்களில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பாஜக கூட்டணி நடந்துகொண்டுள்ளது, குறிப்பாக வடகிழக்குப் பகுதிகளில். ஆனால் அந்த கூட்டணியில் இருப்பவர்கள் தேசத்துக்கு முதல் முக்கியத்துவம் அளிப்பவர்களாக உள்ளனர்.

திமுகவின் பேச்சு பாஜகவுக்கு நேர் எதிராக உள்ளது. முதல்வரை வைத்துக் கொண்டு கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் மாநிலத்திற்கு சுயாட்சி வேண்டும் என்று பேசுகின்றனர். இவையெல்லாம் பாஜகவின் டிஎன்ஏவுக்கே எதிரானது. அப்படியிருக்கும்போது எந்த காலக்கட்டத்திலும்கூட, இப்படி பேசுகின்ற திமுகவோடு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. இது ஒரு மாநிலத் தலைவராக என்னுடைய கருத்து.

தேசியத் தலைமையும் இதையே வலியுறுத்தும். காரணம், இது கட்சியின் டிஎன்ஏ. ஒவ்வொரு தொண்டனின் உணர்வு. அவ்வாறு இருக்கும்போது ஒரு பிரிவினை பேசக்கூடிய கட்சியோடு எப்படி பாஜக இணைந்திருக்க முடியும். பாஜக யாருடனும் கூட்டணி வைத்துதான் 400 எம்.பி. இடங்களைப் பிடிக்கப்போவது இல்லை.

பாஜக தனித்துப் போட்டியிட்டாலே 370-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான எம்.பிக்களை பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. பாஜக கூட்டணி தேசிய தன்மைக்கானது. எனவே, யாருடனும் கூட்டணி வைத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் பாஜகவுக்கு கிடையாது. நாங்களாக தனித்தன்மையாக வளர்ந்து வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

திமுக அமைச்சர்களுக்கு எதிராக பாஜக சார்பில் ஆளுநர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகார் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான ஹெல்த் மிக்ஸ் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுத்துள்ள புகார் பரிசீலனையில் உள்ளன. அரசு அதிகாரிகள் அவர்களது பணியை செய்ய வாய்ப்பு அளித்துள்ளோம்.

ஒருவேளை அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நோக்கி செல்வது இயல்பு. ஆனால், அமைச்சர் எங்களை நீதிமன்றத்துக்கு போக சொல்வதை பார்த்தால், தமிழக அரசு அதிகாரிகள் ஊழல் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் என்பதை அமைச்சரே உறுதி செய்துள்ளார் என்பதை காட்டுகிறது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x