Last Updated : 02 Aug, 2022 12:00 PM

 

Published : 02 Aug 2022 12:00 PM
Last Updated : 02 Aug 2022 12:00 PM

கியான்வாபி மசூதி வழக்கு: முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் அபய் நாத் மாரடைப்பால் மரணம்

அபய் நாத் யாதவ்

புதுடெல்லி: வாரணாசியின் கியான்வாபி மசூதி வழக்கில் முஸ்லிம் தரப்பின் வழக்கறிஞரான அபய் நாத் யாதவ் (60) மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த மரணத்தால், முஸ்லிம் தரப்பினருக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இதனுள் இருக்கும் சிங்கார கவுரி அம்மனை தரிசிக்கும் வழக்கு வாரணாசி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விசாரிக்கப்படும் இவ்வழக்கில் மத்திய அரசின் புனிதத்தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991 இன் அடிப்படையில் விசாரிக்கக் கூடாது என்பது முக்கிய அம்சமாக உள்ளது. ஐந்து பெண்கள் உள்ளிட்ட இந்துக்கள் தரப்பிலான இவ்வழக்கை கியான்வாபி மசூதியின் நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி எதிர்கொள்கிறது.

முஸ்லிம் தரப்பின் இந்த கமிட்டியின் சார்பில் வாரணாசியின் மூத்த வழக்கறிஞரான அபய் நாத் யாதவ் வாதிட்டு வந்தார். இவர், வரும் ஆகஸ்ட் 4இல் இந்துக்கள் தரப்பின் முக்கிய வாதங்களை எதிர்கொள்ள இருந்தார். இச்சூழலில், நேற்று முன்தினம் இரவில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

இதற்காக அபய்நாத்தை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அதற்கு முன்பாகவே அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதை ஏற்க மனமில்லாத வழக்கறிஞர் அபய் நாத்தின் குடும்பத்தினர் வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் எந்த பலனும் கிடைக்கவில்லை. கடந்த 30 வருடங்களாக வாரணாசியின் வழக்கறிஞரான அபய்நாத், 3 வருடங்களாக கியான்வாபி மசூதி வழக்குகளில் முஸ்லிம் தரப்பினருக்காக ஆஜராகி வந்தார். இவரது திறமையான வாதங்களுக்காக வாரணாசி வழக்கறிஞர்கள் இடையே அபய் நாத், மிகவும் மதிக்கப்பட்டார்.

இவருக்கு மனைவி, மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அபய் நாத்தின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டும் அன்றி, வாரணாசியின் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x