Published : 05 Oct 2016 09:27 AM
Last Updated : 05 Oct 2016 09:27 AM

கல்லூரி மாணவரை குத்தியவர் கைது

கோட்டூர்புரம் பறக்கும் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவரை சரமாரியாக கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளியை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தயரன் மைக்கேல் முடாரி (23). அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கிறார். பறக்கும் ரயில் மூலம் தினமும் கல்லூரிக்கு சென்று வருவார். நேற்று முன்தினம் கோட்டூர்புரம் ரயில் நிலையத்தில், தனது தோழியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அங்கு வந்த 2 பேர் மைக்கேலை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, தப்பினர். இத்தாக்குதலில் அவரது முகம், தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவர் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர். பெண் விவகாரத்தில் இத்தாக்குதல் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. மைக்கேல் கூறிய தகவலின்பேரில், அவரைத் தாக்கியது தண்டையார்பேட்டையை சேர்ந்த தில்லா என்ற சரவணன் (27), அவரது கூட்டாளி ரித்தீஷ் என்பது உறுதிசெய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவிலேயே சரவணனை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரித்தீஷை தேடி வருகின்றனர்.

மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி பெண் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி சென்னை பெருநகர காவல் துறை மற்றும் ரயில்வே போலீஸுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “ரயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 8 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x