Last Updated : 29 Jul, 2022 11:27 PM

 

Published : 29 Jul 2022 11:27 PM
Last Updated : 29 Jul 2022 11:27 PM

குமரியில் மணப்பெண், அமெரிக்காவில் மணமகன்: வீடியோ கால் திருமணத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

மதுரை: கன்னியாகுமரி பெண்ணும், அமெரிக்க ஆணும் வீடியோ காலில் திருமணம் செய்ய அனுமதி வழங்கி, அவர்களின் திருமணத்தை சிறப்பு திருமண பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்றிதழ் வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் வாஷ்மி சுதர்ஷினி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நானும் அமெரிக்காவை சேர்ந்த ராகுல் எல்.மதுவும் காதலித்தோம். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். திருமணத்துக்காக ராகுல் இந்தியா வந்தார். ஆனால் காரணம் இல்லாமல் எங்களுக்கு திருமணம் செய்து வைக்க மணவாளக்குறிச்சி சார் பதிவாளர் மறுத்துவிட்டார்.

பின்னர் விசா காலம் முடிந்ததால் ராகுல் அமெரிக்க சென்றுவிட்டார். தற்போது அவரால் இந்தியா வர முடியாத சூழல் உள்ளது. என்னாலும் உடனடியாக அமெரிக்கா செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இருவரும் வீடியோ கால் வாயிலாக திருமணம் செய்யவும், எங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் எம்.ஞானகுருநாதன் வாதிட்டார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: திருமண பதிவு சட்டத்தில் வீடியோ காலில் திருமணம் நடைபெறக் கூடாது என சொல்லப்படவில்லை. சார் பதிவாளர் முன்பு மனுதாரர்கள் நேரில் ஆஜராகியுள்ளனர். இருவருக்கும் அப்போது திருமணம் செய்து வைத்திருந்தால் இப்பிரச்சினை வந்திருக்காது. அதிகாரிகளின் தவறால் யாரும் பாதிக்கப்படக்கூடாது.

பல்வேறு நாடுகளில் ஆன்லைன் வழியாக திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரர் வீடியோ கால் வழியாக அமெரிக்காவில் இருக்கும் ராகுலை திருமணம் செய்ய எந்த சட்டத் தடையும் இல்லை. ராகுல் ஏற்கெனவே மனுதாரருக்கு பவர் வழங்கியுள்ளார். இதனால் திருமண பதிவேட்டில் மனுதாரர் அவர் சார்பிலும், ராகுல் சார்பிலும் கையெழுத்திடலாம். பின்னர் சட்டப்படி திருமண பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x