Published : 30 Jun 2014 10:56 AM
Last Updated : 30 Jun 2014 10:56 AM

கருணாநிதியின் பி.ஏ.,வாக சண்முகநாதன் சேர்ந்தது எப்படி?: திருமண விழாவில் வெளியான சுவாரஸ்ய தகவல்

திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் எப்படி இந்தப் பணிக்கு வந்தார் என்பது குறித்த ருசிகர தகவலை கருணாநிதியே வெளியிட்டார்.

திமுக தலைவர் கருணாநிதியிடம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளர் மற்றும் செயலாளராக (பி.ஏ.,) பணியாற்றி வருபவர் கோ.சண்முகநாதன். ‘குட்டி பி.ஏ.’ என்று திமுகவினரால் செல்லமாக அழைக்கப்படும் சண்முகநாதன், கருணாநிதிக்கு எப்படி அறிமுகமானார்?

சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடந்த சண்முகநாதன் இல்லத் திருமண விழாவில் இதுபற்றி கருணாநிதியே விளக்கமான கூறினார். அவர் பேசியதாவது:

தமிழகத்தில் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைவதற்கான சூழல் ஏற்பட்ட நேரத்தில் யாரையெல்லாம் அமைச்சராக்குவது என்று ஆலோசனை நடந்து, என்னையும் அமைச்சரவையில் ஒருவராகத் தேர்வு செய்தனர். அப்போது, யாரை பி.ஏ.வாக வைத்துக்கொள்ளப் போகிறாய் என்று என்னிடம் கேட்டனர். எனக்கு சண்முகநாதனின் முகம்தான் நினைவுக்கு வந்தது.

அதற்கு முன்பெல்லாம் திமுகவினரின் பேச்சுக்களை பேராசிரியர், என் போன்றோரின் பேச்சுகளை உடனுக்குடன் பதிவு செய்து எழுதி மேலிடத்துக்கு அனுப்பும் பணியை காவல் துறையின் துப்பறியும் பிரிவினர் மேற்கொள்வர். அப்படி பதிவு செய்த பேச்சுகளை வைத்து வழக்கும் போடுவார்கள். ஒருமுறை என் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு போடும் அளவுக்கு அப்படி என்ன தவறாகப் பேசிவிட்டோம் என்பதை அறிய, போலீஸிடமிருந்த எனது பேச்சு நகலை வாங்கிப் பார்த்தேன்.

அதில் என்னுடைய பேச்சு, பேராசிரியர் அன்பழகனின் பேச்சு மற்றும் திமுகவினரின் பேச்சுகளெல்லாம் அப்படியே எழுத்து வடிவமாகப் பதிவாகி யிருந்தது. ஒரு எழுத்துகூட தவறாமல் அத்தனையும் பதிவாகி இருந்ததைப் பார்த்து ஆச்சரியப் பட்டோம்.

வழக்கு விசாரணையின்போது ‘நீங்கள் இப்படிப் பேசினீர்களா?’ என்று நீதிமன்றத்தில் கேள்வி கள் கேட்ட நேரத்தில், ‘மனச் சாட்சிப்படி உண்மைதான், அவை நாங்கள் பேசியது தான்’ என்று ஒப்புக்கொள்ள நேரிட்டது.

யார் இவ்வளவு சரியாக எங்கள் பேச்சை அச்சு அசலாக படியெடுத்திருப்பார்கள் என்று விசாரித்தபோதுதான், சண்முக நாதன் போன்றவர்கள் போலீஸ் துறையில் குறிப்புகள் எடுக்கும் சுருக்கெழுத்தாளர்களாக பணியாற்றியது தெரியவந்தது. நான் அமைச்சரானபோது, பி.ஏ.வாக யாரைப் போடலாம் என யோசித்த நேரத்தில் சண்முகநாதன்தான் நினைவுக்கு வந்தார். அந்தத் தம்பியை வைத்துக் கொள்கிறேன் என்றேன்.

சண்முகநாதனைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் என்பதைவிட, என்னு டைய அகத்திலே இருந்து பணியாற்றுபவர். வெறும் சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்து விட்டவர்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

தமிழுக்கு ஏற்றம் தருவோம்

திருமண விழாவில் கருணாநிதி பேசியபோது, ‘‘நான் நடத்தி முடித்தது தமிழ்த் திருமணம். மணமக்கள் பெயர் விக்ரம், நிஷாந்தி. முடிந்தவரை தமிழுக்கு ஏற்றம் தரும் அளவுக்கு நாம் நடந்துகொள்ள வேண்டும். இப்போது விட்டுவிட்டால் தமிழைக் காப்பாற்ற, தமிழுக்கு நேரும் ஆபத்துக்களை தடுத்து நிறுத்த யாருமே இருக்க மாட்டார்கள். எதிர்காலத்திலே தமிழ் இருக்குமா என்ற கேள்வியோடு, இன்றைக்கும் நாம் இருக்கின்றோம். ஏனென்றால் அப்படிப்பட்ட புயல் இந்தியாவிலே வீசி, அது தென்னகத்திலே தவழ்ந்து, தமிழகத்திலும் புயலாக மாறியிருக்கிறது, அந்தப் புயலைத் தடுத்து நிறுத்த சண்முகநாதனுக்கு ஒன்றைச் சொல்கிறேன். விக்ரம் என்ற மணமகன் பெயரையும், நிஷாந்தி என்ற மணமகள் பெயரையும், கூடுமான வரை தமிழ்ப் பெயர்களாக மாற்றி, தமிழுக்குப் பெருமை தேடித் தாருங்கள்’’ என்றார்.

இதையடுத்து, ‘நீங்களே தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்’ என்று கருணாநிதியிடம் சண்முகநாதன் கூறினார். ‘நல்ல பெயர்களாக சிந்திப்பதற்கு எனக்கு சிறிது நேரம் வேண்டும். அந்தப் பெயர்களை வீட்டுக்குப் போன பிறகு நிச்சயமாகச் சொல்வேன், அந்தப் பெயர் முரசொலியில் வெளிவரும்’ என்று கருணாநிதி தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x