Last Updated : 26 Jul, 2022 09:00 AM

 

Published : 26 Jul 2022 09:00 AM
Last Updated : 26 Jul 2022 09:00 AM

‘வாகன திருட்டு குறித்து தகவல் தெரிவிக்க தாமதமான காரணத்தை வைத்து இழப்பீட்டு கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது’

வாகனம் திருடுபோனது குறித்து தகவல் தெரிவிக்க தாமதமானது என்ற காரணத்தை மட்டும் வைத்து, நியாயமான இழப்பீட்டு கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது என உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை துடியலூரைச் சேர்ந்த மகேஸ் ராஜா என்பவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், “எனது இருசக்கர வாகனத்துக்கு தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் முழு காப்பீடு செய்திருந்தேன். இந்நிலையில், எனது வீட்டின் முன்பு கடந்த 2018 ஏப்ரல் 25-ம்தேதி நிறுத்தியிருந்த வாகனம் திருடுபோனது.

இதையடுத்து, துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். அதோடு, காப்பீட்டு நிறுவனத்துக்கும் தகவல் தெரிவித்தேன். இதையடுத்து, பலமுறை தொடர்புகொண்டும் எனது வாகனத்துக்கு கிடைக்க வேண்டிய காப்பீட்டுத்தொகையை காப்பீட்டு நிறுவனத்தினர் அளிக்கவில்லை. நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. எனவே, எனக்கு அளிக்க வேண்டிய காப்பீட்டுத்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்”என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.தங்கவேல், பி.மாரிமுத்து, ஜி.சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் வாகனம் தொலைந்து 71 நாட்களுக்கு பிறகு காவல்நிலையத்திலும், 72-வது நாளில்தான் காப்பீட்டு நிறுவனத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், இது பாலிசியின்படி விதிமீறில் எனவும் காப்பீட்டு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு தாரர் காவல்நிலையத்தில் வாகனம் தொலைந்த மறுநாளே புகார் அளித்துள்ளார்.

ஆனால், முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), 2018 ஜூலை 5-ம் தேதிதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமனுதாரரின் தவறு அல்ல. தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு எதிராக குர்ஷிந்தர் சிங் என்பவர் 2020-ம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘திருட்டு குறித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்க தாமதமானது என்ற காரணத்தை மட்டும் வைத்து நியாயமான கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது’ என்று தீர்ப் பளித்துள்ளது.

மேலும், 2017-ல்இதேபோன்ற ஒரு வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் ஆணையம், காப்பீட்டு மதிப்பில் 75 சதவீதம் வரை வழங்கலாம் என தீர்ப்பளித்துள்ளது. மனுதாரரின் வாகனத்துக்கு காப்பீட்டாளர் நிர்ணயித்த மதிப்பு (ஐடிவி) ரூ.23,809 ஆகும். எனவே, அதில் 75 சதவீதமான ரூ.17,857-ஐ காப்பீட்டு நிறுவனம் அளிக்க வேண்டும். அதோடு, வழக்குச் செலவாக ரூ.3 ஆயிரம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

ஐடிவி என்றால் என்ன?

முழு வாகன காப்பீட்டில் ஐடிவி (காப்பீட்டாளர் நிர்ணயித்த மதிப்பு) என்பது, வாகனம் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ, மொத்த இழப்புக் கோரிக்கையின்போது உங்கள் காப்பீட்டு நிறுவனம் உங்களுக்குச் செலுத்தும் உறுதிசெய்யப்பட்ட அதிகபட்சத் தொகையாகும்.

ஐடிவி-ஐ தீர்மானிக்கும் முக்கிய காரணியாக வாகனத்தின் வயது உள்ளது. உங்கள் வாகனம் பழையதாக ஆக, அதன் ஐடிவி அதற்கேற்ப குறையும். மேலும், வாகனத்தின் தேய்மானமும் ஐடிவி-ஐ தீர்மானிக்கிறது என காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x