Published : 29 Sep 2016 06:03 PM
Last Updated : 29 Sep 2016 06:03 PM

கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைத்திட நிலம் ஒதுக்கீடு செய்க: வைகோ

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் கள அருங்காட்சியகம் அமைக்கத் தேவையான நிலத்தைத் தமிழக அரசு உடனடியாக ஒதுக்கித் தர வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பழந்தமிழர் நாகரிகம், கலை, பண்பாட்டு வாழ்வியல் கூறுகள் போன்றவற்றைப் பறைசாற்றும் தொல்பொருள் ஆய்வுகள் ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற இடங்களில் நடைபெற்று, பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. பழந்தமிழகத்தில் நகர நாகரிகம் செழித்து ஓங்கி இருந்ததற்கான சான்றுகள் சிவகங்கை மாவட்டம் - திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வு ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்பட்டு இருக்கின்றன.

அங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் 110 ஏக்கர் நிலப்பரப்பில், தற்போது வெறும் ஐம்பது சென்ட் நிலப்பரப்பில் நடந்த ஆய்வில் மட்டும், தொன்மையான கட்டிடங்களின் தரைத் தளங்கள், மதில் சுவர்கள், வடிகால்கள் மற்றும் சுடுமண் குழாய்கள் மற்றும் சதுரங்கக் காய்கள், மணிகள், வணிகர்களின் எடைக் கற்கள், நெசவுத் தொழிலுக்கான தக்கைகள் போன்றவை கிடைத்துள்ளன.

தமிழ்ப் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளில் பிராகிருதம் உள்ளிட்ட வேறு மொழிப் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பண்டைத் தமிழர்கள் ரோமாபுரி வரை சென்று வணிகம் செய்ததற்கான ஆவணங்களாக மட்பாண்டங்கள், முத்துக்கள், தந்தத்தால் ஆன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் ஈராயிரம் ஆண்டுக்காலத் தொன்மை குறித்த வரலாற்று ஆவணங்களாக கீழடி அகழ்வு ஆய்வில் கிடைத்த பழங்காலப் பொருட்கள் விளங்குகின்றன.

எஞ்சிய பகுதிகளில் முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், சங்க காலத்தில் செழிப்புற்ற தமிழர் நாகரிகத்தின் தொன்மை குறித்து உலகிற்கு மேலும் பற்பல உண்மைகள் தெரிய வரும். கீழடியில் கிடைத்த பழங்கால வரலாற்றுப் பொருட்களைக் காட்சிப்படுத்தக் கள அருங்காட்சியகம் அமைக்க மத்திய தொல்லியல்துறை தயாராக இருந்தும், அதற்கான இடம் ஒதுக்கித் தருவதற்கு தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவது வேதனை அளிக்கின்றது.

கீழடியில் கள அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யுமாறு வைக்கப்பட்ட கோரிக்கையை தமிழக அரசு, இரண்டு ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது ஆகும். அரசு நிலம் ஒதுக்கீடு செய்து தராவிட்டால், அங்கு அகழ்வராய்ச்சில் கிடைத்த பழங்காலப் பொக்கிஷங்கள் அனைத்தும் மூட்டை கட்டி, மைசூரில் உள்ள மத்திய அகழ்வுப் பிரிவின் கிட்டங்கியில் கொண்டுபோய்ப் போடப்படும் நிலைமை ஏற்படும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் கள அருங்காட்சியகம் அமைக்கத் தேவையான நிலத்தைத் தமிழக அரசு உடனடியாக ஒதுக்கித் தர வேண்டும்.அத்துடன், அகழ்வு ஆய்வுப் பணிகள் முழுமையாக நடைபெற்றிடத் தொல்லியல் துறைக்குத் தேவையான உதவிகளையும் செய்திட வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x