Last Updated : 30 Sep, 2016 09:19 AM

 

Published : 30 Sep 2016 09:19 AM
Last Updated : 30 Sep 2016 09:19 AM

தமிழகம் முழுவதும் மக்கள் நலக் கூட்டணி: திருவாரூரில் மட்டும் திமுகவுடன் கூட்டணி?- இந்திய கம்யூனிஸ்ட் விநோத வியூகம்

தமிழகம் முழுவதும் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் திமுகவுடன் மறைமுக கூட்டணி அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய 4 கட்சிகள் இணைந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. ஆனால், இதற்கு மாறாக திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள், திமுகவுடன் தேர்தல் உடன்பாடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கோட்டூர் ஒன்றியத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 8 ஒன்றிய உறுப்பினர்,16 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான இடங் களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க திமுக முன்வந் துள்ளதாக அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலஞானவேல் தெரி வித்தார்.

அதேபோல மன்னார்குடி ஒன்றியத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 6 ஒன்றியக்குழு உறுப் பினர், 10 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான இடங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளதாக தெரி கிறது. திருத்துறைப்பூண்டியில் 4 நகராட்சி வார்டு உறுப்பினர் இடங்களை தர திமுக சம்மதித்துள்ளதாகவும், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு பேச்சு வார்த்தை நடைபெற்று வருவ தாகவும் திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், முத்துப் பேட்டை, கொரடாச்சேரி, குட வாசல், நன்னிலம் ஆகிய ஊர்களில் பேச்சுவார்த்தை நடை பெற்று வருவதாகவும் கம் யூனிஸ்ட், திமுகவின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

கூட்டணிக்கு பங்கமில்லாமல்..

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணனிடம் கேட்ட போது, ‘‘உள்ளாட்சித் தேர்தல் என்பது உள்ளூர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேர்தல். ஆகவே, திமுக தலைமை உருவாக்கியுள்ள கூட்டணிக்கு பங்கம் இல்லாமலும், கொள்கை களில் தடம் மாறாமலும் வெற்றி பெறுவதற்கான சில நடவடிக்கைகளில் எங்கள் கட்சி ஒன்றிய நிர்வாகிகள் ஈடுபட்டிருக்கக் கூடும்’’ என்றார்.

திருவாரூர் மாவட்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ் ஆகியோர் திமுக வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என மறுப்பு தெரி வித்தனர்.

ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் ஆர்.வீரமணியிடம் கேட்டபோது, ‘‘எங்கள் ஒன்றியத்தில் திமுகவுடன் கூட்டணி பேசி முடித்து விட்டோம். நாங்கள் நீண்ட நாட்களாக தலைவர் பதவி வகித்து வரும் சில ஊராட்சிகளில் திமுகவினரும் போட்டியிடுவதாக கூறுகின்ற னர். அதுபோன்ற சில பிரச்சினை கள் மட்டும் தற்போது பேச்சு வார்த்தையில் உள்ளன’’ என்றார். கோட்டூர் ஒன்றியச் செயலாளர் கே.மாரிமுத்து கூறும்போது, ‘‘திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்ற கட்சி உறுப்பினர்கள் விருப்பப்படி அவர்களுடன் பேசி வருகிறோம். அதே நேரத்தில் தனித்துப் போட்டியிடவும் தயார் நிலையில் உள்ளோம்’’ என்றார்.

திமுக பொய்ப் பிரச்சாரம்

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் கேட்டபோது, ‘‘திருவாரூரில் மட்டுமல்ல, தமிழகத்தில் எங்கும் திமுகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உடன்பாடு செய்து கொள்ளவில்லை. மக்கள் நலக் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த திமுக மேற்கொள்ளும் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் இது’’ என்றார்.

‘‘அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக ஆகிய கட்சி களுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை திமுகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எங்கும் கூட்டணி இல்லை’’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்ற கட்சி உறுப்பினர்கள் விருப்பப்படி அவர்களுடன் பேசி வருகிறோம். அதே நேரத்தில் தனித்துப் போட்டியிடவும் தயார் நிலையில் உள்ளோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x