Last Updated : 30 May, 2016 02:30 PM

 

Published : 30 May 2016 02:30 PM
Last Updated : 30 May 2016 02:30 PM

புதுச்சேரி: ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நாராயணசாமி

புதுச்சேரியில் ஆட்சியமைக்க அழைக்க உரிமை கோரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் இன்று நாராயணசாமி கடிதம் தந்தார். துணைநிலை ஆளுநரும் நானும் இணைந்து பணியாற்றுவோம். அவருடன் மோதல் போக்கு ஏற்படாது என்று நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 17 தொகுதிகளை வென்று பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் கடந்த 28-ம் தேதி காலாப்பட்டிலுள்ள ஹோட்டலில் நடைபெற்ற காங். எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேரவை கட்சித் தலைவராக நாராயணசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து மாநிலத்தலைவர் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டதால் தடியடி நடந்தது. பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. நமச்சிவாயத்தை அவரது வீட்டுக்கு சென்று காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தரப்பு சமாதானம் செய்தது.

இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தரும் கடிதத்தை திமுக தலைவர் கருணாநிதி நாராயணசாமியிடம் வழங்கினார். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதம் வழங்க இன்று காலை நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.நமச்சிவாயம் ஆகியோர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் வழங்கினர். திமுக தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது:

''துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை அளித்தேன். மேலும் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடிதம், மாநில காங்கிரஸ் கமிட்டி அளித்த கடிதம், திமுக தலைவர் கருணாநிதி அளித்த ஆதரவு கடிதம் ஆகியவற்றையும் அதனுடன் வழங்கினேன். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதை மத்திய உள்துறை அமைச்சகதிடம் அனுமதி பெறுவதற்காக அனுப்பி வைப்பார்.

புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பாகவும், அமைச்சர்கள் பட்டியல் தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் ஆலோசிப்பதற்காக நானும், மாநிலத் தலைவர் நமச்சிவாயமும் இன்று டெல்லி செல்கிறோம். அங்கு அமைச்சரவைப் பட்டியலுக்கு கட்சித் தலைமை ஒப்புதல் அளித்தவுடன், அதற்கான கடிதத்தையும் துணைநிலை ஆளுநரிடம் வழங்குவோம். விரைவில் காங்கிரஸ் அரசு பதவியேற்கும் தேதி தெரிவிக்கப்படும்.

காங்கிரஸ் கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை, அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி தருவதற்காக மத்திய பாஜக அரசு கிரண்பேடியை ஆளுநராக நியமித்துள்ளதா எனக்கேட்டதற்கு, "ஆளுநர் என்பவர் கட்சிக்கு அப்பாற்பட்டவர். அவர் நடுநிலையானவர். அவருடன் மோதல் போக்கு எதுவும் ஏற்படாது. இருவரும் இணைந்து பணிபுரிவோம்" என்று நாராயணசாமி குறிப்பிட்டார்.

அதையடுத்து மாநில தலைவர் நமச்சிவாயம் கூறியதாவது:

சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்வில் எந்த பிரச்னையும் இல்லை. நான் முதல்வர் நாராயணசாமி தலைமையின் கீழ் இணைந்து செயல்படுவேன். எங்கள் முக்கிய நோக்கமே புதுச்சேரி மாநிலத்தை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவதே ஆகும். நாங்கள் ஒற்றுமையாக இருந்து இதை செயல்படுத்துவோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x