Published : 22 Jul 2022 05:56 PM
Last Updated : 22 Jul 2022 05:56 PM

அதிகாரிகள் அலட்சியம்: புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் குறைந்தளவு தண்ணீர் திறப்பு- விவசாயிகள் குற்றச்சாட்டு

ஜி. செல்லமுத்து

திருச்சி: புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தற்போது குறைந்தளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நேரடி பாசனமாக 11,198 ஏக்கர், 107 குளங்கள் மூலமாக 9,464 ஏக்கர் என 20,662 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 16,164 ஏக்கர் விளைநிலங்களில், மாவட்டத்தில் உள்ள நவலூர் குட்டப்பட்டு, சாத்தனூர், செம்பட்டு, குண்டூர், கும்பக்குடி ஆகிய பகுதிகளில் இருபோகம் விவசாயம் மேற்கொள்வது வழக்கம். தஞ்சாவூர் மாவட்ட கடைமடை பகுதியில் ஒருபோகம் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் மேல் இருந்ததால், வழக்கத்துக்கு மாறாக முன்னதாகவே (மே 24) பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கிளை வாய்க்காலான புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலும் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படலாம் எனவும், அவ்வாறு திறந்தால் கூடுதலாக ஒரு போகம் விவசாயம் மேற்கொள்ளலாம் எனவும் இந்த வாய்க்கால் பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், மேட்டூர் அணை கடந்தவாரம் நிரம்பியதை அடுத்து, காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால், புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்படும் என கருதப்பட்டது. ஆனால், வாய்க்காலில் வழக்கத்தைவிட குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் திறக்காததற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படாததால் தஞ்சாவூர் மாவட்ட கடைமடைக்கு குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என விவசாய சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் கண்ணன் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: “மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், வழக்கத்தைவிட 19 நாட்களுக்கு முன்னதாகவே பாசனத்துக்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதன்காரணமாக, வழக்கமாக ஆகஸ்ட் 1-ம் தேதி திறக்கப்படும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலும் முன்கூட்டியே நீர் திறக்கப்படலாம் எனக் கருதி, வாய்க்காலில் தூர் வாரும் பணி மற்றும் படித்துறைகளை பராமரிப்பு செய்யும்பணிகளை விரைவாக செய்யும்படி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி, அதிகாரிகள் தூர் வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், ஜூலை 17-ம் தேதி முன் அறிவிப்பின்றி புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கமாக திறக்கப்படும் அளவைவிட குறைவாக தண்ணீர்திறக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு பிறகு கடைமடைக்கு தண்ணீர் வந்தடைவது போலவே, நிகழாண்டிலும் தண்ணீர் கடைமடைக்கு வரும் நிலையே உள்ளது. வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு 4 நாட்களாகியும் இன்றுவரை திருச்சி பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

மேட்டூர் அணை திறக்கப்பட்ட சில நாட்களில் இந்த வாய்க்காலிலும் முன்கூட்டியே தண்ணீர் திறந்திருந்தால், இதன் பாசனப் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் நீரை நிரப்பி நிலத்தடி நீரை அதிகரிக்க செய்திருக்கலாம்.

மேட்டூர் அணைக்கு சில நாட்களுக்கு முன் அதிகளவிலான நீர் வரத்து இருந்ததால், அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சம்கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரையும் கிளை வாய்க்காலில் முழு அளவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அந்த நீர் வீணாக கடலில் கலக்கிறது. இதற்கு காரணம் நீர் மேலாண்மை செய்வதில் அதிகாரிகள் அக்கறை செலுத்தாததே” என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை (ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம்) அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் முன்கூட்டியே நீர் திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் இந்த வாய்க்காலின் மேல் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாலம் கட்டி வந்ததால் நீர் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. எனினும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜூலை 17-ல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வாய்க்காலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் உறுதித் தன்மையை பரிசோதனை செய்வதற்காக, வாய்க்காலில் வழக்கமாக திறக்கப்படும் 800 கன அடிக்கு பதிலாக, 450 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. எனினும், ஓரிரு வாரத்தில் வாய்க்காலில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்.

நிகழாண்டில் நிதி ஒதுக்காததால் தூர் வாரும் மற்றும் இதரப் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. அடுத்த ஆண்டில் நிதி பெற்று இப்பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x