Published : 21 Jul 2022 09:10 AM
Last Updated : 21 Jul 2022 09:10 AM

ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக்கியது ஏன்? - அதிமுகவில் ஓபிஎஸ்-க்கு ‘செக்’ வைத்த பழனிசாமி

ஆர்.பி.உதயகுமார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் இருப்பவர் ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ முதல்வராக கே.பழனிசாமி பொறுப்பேற்றது முதல் அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.

கட்சியில் அவ்வப்போது நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் தலைமை கூறுகிறதோ இல்லையோ இவரே பழனிசாமியின் தூதுவராக ஓ.பன்னீர் செல்வத்திடம் சென்று சமாதானம் பேசி வந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டு அவரை வெற்றிபெற வைத்தார். ஆனாலும், ஆர்.பி.உதயகுமார் கே.பழனிசாமி ஆதரவாளர் என்பதால் அவர் மீது ஓ.பன்னீர்செல்வத்துக்கு நம்பிக்கை இல்லை. அதனால், கட்சிக்குள் ஆர்.பி.உதயகுமா ருக்கு எதிராக நெருக்கடியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதிருப்தியடைந்த ஆர்.பி.உதயகுமார், கே.பழனிசாமிக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமை கோஷத்தை முதல்முறையாக எழுப்பினார். அது முதலே கட்சிக்குள் ஒற்றைத் தலைமை கோஷம் ஓங்கி ஒலித்தது,

இடைக்காலப் பொதுச்செயலாளராக கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓ.பன்னீர்செல்வத்தை ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில்தான் ஆர்.பி.உதயகுமாருக்கு ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டத்தைச் சேந்தவர் என்பதோடு முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது பதவியை மற்றவர்களுக்கு வழங்கினால் கட்சிக்குள் சிக்கல் ஏற்படும். அதனால், அவரது சமூகத்தைச் சேர்ந்த அதே நேரத்தில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்ட ஆர்.பி.உதயகுமார், அவர் சிறைக்குச் சென்றதும் கே.பழனிசாமி அணிக்கு தாவி அவரிடம் நெருக்கம் காட்டினார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முதல் அடிக்கடி பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கே.பழனிசாமியை மதுரைக்கு அழைத்து வந்தார். அதனால், கட்சியில் ஆர்.பி.உதயகுமாருக்கு கே.பழனிசாமி முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். பழனிசாமி மீது சிலர் சாதிச் சாயம் பூசிய நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கினால் அந்தக் களங்கம் துடைக்கப்படும் என அவர் நம்புகிறார்.

மேலும், சீனியரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் அவரது சமூகத்தைச் சேர்ந்த அதே நேரத்தில் ஜூனியரான ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி வழங்குவதுதான் சரியாகும் என்ற கணித்திருக்கலாம்.

கட்சியில் ராஜன்செல்லப்பா, செல்லூர் கே.ராஜூவை விட ஜூனியர் ஆர்.பி.உதயகுமார். அதனால், அவர்களுக்கு மாநில அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி அவர்களையும் கே.பழனிசாமி சரிக்கட்டி ஆர்.பி.உதயகுமாருக்கு சட்டப்பேரவையில் தனக்கு அடுத்த இடத்தைக் கொடுத்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x