Last Updated : 20 Jul, 2022 11:44 PM

 

Published : 20 Jul 2022 11:44 PM
Last Updated : 20 Jul 2022 11:44 PM

தமிழகத்தில் 2ம் உலகப் போரில் சிதைந்த ரயில் பாதை மீண்டும் அமைகிறது - திட்ட அறிக்கைக்காக நிதி ஒதுக்கீடு

சிதிலமடைந்த ஜோலார்பேட்டை-கிருஷ்ணகிரி-ஒசூர் ரயில் பாதை

புதுடெல்லி: இரண்டாம் உலகப் போரின்போது சிதிலமடைந்த ஜோலார்பேட்டை-கிருஷ்ணகிரி-ஒசூர் ரயில் பாதை மீண்டும் அமையவுள்ளது. கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி செல்லக்குமார் முயற்சியால் இந்த ரயில் பாதை அமைவதற்கான விரிவானத் திட்ட அறிக்கைக்காக ரயில்வே ரூ.2.45 கோடி ஒதுக்கி உள்ளது.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1942 வரை, ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு சென்றவர ரயில் பாதை செயல்பாட்டில் இருந்துள்ளது. இரண்டாம் உலக யுத்தம் 1942ல் நடைபெற்ற போது, அந்த ரயில்பாதையின் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. இதன்பிறகு சுமார் 75 ஆண்டுகளாக ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரி மார்கமாக ஓசூருக்கான ரயில் திட்டம் வெறும் கனவாகவே இருந்து வருகிறது. இதன் மீது ஒவ்வொரு தேர்தலிலும் அளிக்கப்பட்டவை வெறும் வாக்குறுதியாகவே தொடர்ந்துள்ளன.

இதற்காகப் பல காலகட்டங்களில் கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுப்புற தொகுதி எம்பிக்கள், நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் எழுப்பியிருந்தனர். இதை ஏற்று 1970 க்கு பின் 11 முறை அதற்கான சர்வேயும் ரயில்துறை அதிகாரிகளால் நடத்தப்பட்டுள்ளன. எனினும், இதன் அறிக்கைகளில் ஒவ்வொரு முறையும் குறைந்தபட்ச பலன் இல்லை எனக் குறிப்பிடப்பட்டது. கடைசியாக 2018ல் நடைபெற்ற ஒரு சர்வேயின் அறிக்கையிலும் லாபகரமான குறிப்புகள் இல்லை என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் 2019ல் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸின் செல்லக்குமார் எம்.பியானார். அவர் தொடர்ந்து ரயில்வேத் துறையினரை சந்தித்து இந்த ரயில் பாதைக்கு மீண்டும் உயிர்கொடுக்க முயற்சி எடுத்தார். இந்த முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. இதனால், இரண்டாம் உலகம் போரின்போது சிதைந்த ரயில் பாதையை மீண்டும் அமைக்க ரயில்வே துறை தற்போது முன்வந்துள்ளது. இதற்கான ‘வைனல் லொகேஷன் சர்வே’ அறிக்கை அளிக்க வேண்டி ரூ.2.45 கோடி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை உறுதிப்படுத்தி செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி செல்லக்குமார், "இது கிருஷ்ணகிரி தொகுதி மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இதில், கடைசியாக எடுக்கப்பட்ட சர்வே அறிக்கையை மறுபரிசீனை செய்ய நான் தொடர்ந்து வலியுறுத்தினேன். ரயில்வே துறையினரிடம் எனது தொகுதியான கிருஷ்ணகிரியின் தொழில்களை முன்னிறுத்தினேன். ஏனெனில், கிருஷ்ணகிரியில் சுமார் 150 கனரகத் தொழிற்சாலைகளும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் சுமார் 3,000 உள்ளன.

இதன் உற்பத்திகள் கோயம்புத்தூருக்கு பின் அதிக வருவாயை ஈட்டும் வகையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதை ஏற்று மீண்டும் கடைசியாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை மறுபரீசிலனை செய்யப்பட்டது. இதற்காக, ரயில்வே துறையின் அதிகாரிகளும் என்னுடன் ஒத்துழைத்தனர்.

தற்போது ஒதுக்கப்பட்ட தொகையில் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்த பின், இந்த ரயில் பாதை மீண்டும் அமைக்கும் பணி துவங்கும். 109 கி.மீ தொலைவிலான பாதையில் ஏழே முக்கால் கி.மீ தூரம் புகைப்பாதையாக உள்ளது. எனவே, இது 98 கி.மீ தொலைவாகக் குறைக்கப்பட்டதால், சுமார் 1,460 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், ரயில்வேக்கு சுமார் 500 கோடி ரூபாய் சேமிப்பாகும். இதற்காக நான் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினை சந்தித்த போது, நடப்பு பட்ஜெட்டிலேயே இதை செய்வதாக உறுதி அளித்துள்ளார். கடந்த காலத்தில் இந்த ரயில் பாதை தொடர்ந்து ரயில்வே துறையிடமே இருந்தது சாதகமாக உள்ளது’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x