Last Updated : 20 Jul, 2022 11:36 AM

 

Published : 20 Jul 2022 11:36 AM
Last Updated : 20 Jul 2022 11:36 AM

தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் நலன்: திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு

மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் | கோப்புப் படம்.

புதுடெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநங்கைகள் நலன் மீது திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் பேசினார். அப்போது அவர், இந்த இருவரையும் கருக்கலைப்புக்கான அணுகல் தேவைப்படக் கூடியவற்றில் உள்ளடக்குவதற்கு 'பெண்கள்' என்ற வரையறையை விரிவுபடுத்த வலியுறுத்தினார்.

இது குறித்து மக்களவையில், தென் சென்னை தொகுதி எம்.பி.,யான தமிழச்சி தங்கபாண்டியன் விதி 377இன் கீழ் பேசியதாவது: உலகளவில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட சமூக உறுப்பினர்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் மிருகத்தனமான பாகுபாட்டிற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தியாவில், சமீபத்தில், பள்ளி மாணவியின் பாலியல் அடையாளத்தை கேள்வி கேட்டு கொடுமைப்படுத்தியதால், அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இது போன்ற கொலைகள் நிறுவன கொலை வழக்குகளாக பார்க்கப்பட வேண்டும்.

இந்த யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, இத்தகைய வன்முறைப் பாகுபாடுகளுக்கு எதிராக மத்திய அரசு சட்டங்களைக் கொண்டு வந்திருக்க வேண்டும். மாறாக, மேற்படி நபர்களின் உரிமைகளை குறைக்கும் 3 முக்கியமான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021, உதவி இனப்பெருக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த 3 சட்டங்களில் மேற்படி சமூகத்தினருக்கு எதிரான பிரிவுகளை திரும்பப் பெறுமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்.

தற்போது வாடகைத் தாய்க்கு ஹெட்டரோ - செக்ஸுவல் தம்பதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த சட்டத்தின் கீழ் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமையை மேற்கண்ட சமூகத்தினர் மற்றும் தனிநபர்கள் அல்லது தம்பதிகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்.

மேலும், உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப (ஒழுங்குமுறை) சட்டம், 2021ன் கீழ், மேற்படி சமூகத்தினர் மற்றும் தம்பதிகள் ஏ.ஆர்.டி. சிகிச்சையைப் பெறுவதற்கு தகுதியுடையவர்களாக மாற்றுமாறும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

கருக்கலைப்புக்கான அணுகல் தேவைப்படக்கூடிய திருநங்கைகள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களை உள்ளடக்குவதற்கு 'பெண்கள்' என்ற வரையறையை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும்.

மேற்படி சமூகத்தினரில் மூத்த நபர்களுக்கான பராமரிப்பு, பொது இடங்களில் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x