Published : 19 Jul 2022 09:30 AM
Last Updated : 19 Jul 2022 09:30 AM

ஆதீனங்கள் அரசியல் பேசாமல் ஒதுங்கி இருப்பது நல்லது: தருமபுரம் ஆதீனம் கருத்து

தற்போதைய சூழலில் அரசியல் பேசாமல் ஆதீனங்கள் ஒதுங்கி இருப்பது நல்லது என தருமபுரம் ஆதீனம் கருத்து தெரிவித்தார்.

திருவாரூரில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடங்களையும் மற்றும் ஆதீனத்தின் மனை,வீடு, நிலம் போன்றவற்றை அனுபவித்து வருபவர்கள் வாடகை சரியாக செலுத்துகின்றனரா என்பது குறித்தும் ஆய்வு செய்வதற்காக தருமபுரம் ஆதீனம் ல கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று திருவாரூர் வந்திருந்தார். அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்ற கருத்து குறித்த கேள்விக்கு, இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்த சேக்கிழார், பின்னாளில் சமயத் தலைவரானார்.

அதுபோல, சமயத் தலைவர்கள் பலர் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு பெற்றவர்களாகவே உள்ளனர்.அந்தக் காலத்தில் ஆன்மிகமும் அரசியலும் கலந்துதான் இருந்திருக்கிறது. இருப்பினும், தற்போதைய சூழலில் ஆதீனங்கள் அரசியல் பேசாமல் ஒதுங்கி இருப்பதே நல்லது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது. அவர்களின் முழு ஒத்துழைப்பின் காரணமாகவே நாங்கள் பல இடங்களில் விரைவாக குடமுழுக்கு மற்றும் கோயிலுக்குச் சொந்தமான இடங்களை மீட்பது போன்ற பணிகளைச் செய்ய முடிகிறது.

சைவ சித்தாந்தங்களை வளர்க்கும் வகையில், எங்கள் கல்லூரியின் பாடத் திட்டத்தில் பிஏ சைவ சித்தாந்தம் என்ற பாடப் பிரிவை கொண்டு வந்திருக்கிறோம். வேலைவாய்ப்புக்கு வெளிநாடுகளில் இந்தப் படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தற்போது, ஆங்கில வழியிலும் யூ டியூப் மூலம் சைவ சித்தாந்த வகுப்புகளை புதன்கிழமைதோறும் நடத்தி வருகிறோம். இதில், 20 நாடுகளைச் சேர்ந்த 200-க்கு மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

பொது இடத்தில் தருமபுரி மக்களவைத் தொகுதி எம்.பி செந்தில்குமார் தெரிவித்த கருத்து தேவையற்றது. அவருக்கு விருப்பமில்லை என்றால் அமைதியாக இருந்திருக்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x