Last Updated : 30 May, 2016 02:04 PM

 

Published : 30 May 2016 02:04 PM
Last Updated : 30 May 2016 02:04 PM

குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கோடை விடுமுறை நாட்களில் 21 லட்சம் பேர் வருகை

கோடை சீஸன் நாளையுடன் நிறைவடையும் நிலையில் கன்னியா குமரியில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்த கோடை விடுமுறை நாட்களில் 21 லட்சம் பேர் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்துள்ளனர்.

கன்னியாகுமரியில் கோடை சீஸன் கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கோடை மழை போன்றவற்றால், தொடக்கத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. இந்த மாதம் 10-ம் தேதிக்கு பிறகே கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த கோடை சீஸனில் மட்டும் 21 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட குறைவாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான திற்பரப்பு அருவி, சிற்றாறு, மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரி கோட்டை பூங்கா, பத்மநாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை, கோவளம், ஆயிரங்கால் பொழிமுகம், சங்குத்துறை, சொத்தவிளை போன்ற பகுதிகளிலும் கணிசமான அளவு சுற்றுலா பயணிகளின் வருகை இருந்தது.

நேற்று கோடை சீஸனின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலையில் இருந்தே கன்னியாகுமரி சுற்றுலா தலங்களில் அதிக கூட்டம் இருந்தது. குறிப்பாக குழந்தைகளுடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் வெயிலையும் பொருட்படுத்தாது முக்கடல் சங்கமக் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

நேற்று அதிகாலை 5 மணியில் இருந்தே விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்காக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், 10 ஆயிரம் பேர் வரை மட்டுமே விவேகானந்தர் பாறைக்கு செல்ல முடிந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் விவேகானந்தா, பொதிகை, குகன் ஆகிய 3 படகுகளும் இடைவிடாது படகு சேவை மேற்கொண்டன.

அடிப்படை வசதிகள்

நேற்று மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வந்தபோதிலும், அதற்கேற்ப அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பது பலரை வேதனையடையச் செய்து ள்ளது.

இது குறித்து மதுரையில் இருந்து சுற்றுலா வந்திருந்த பொன்பாண்டி கூறும்போது, “கன்னியாகுமரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது அனைவருக்கும் மன வேதனை அளிக்கிறது. சூரிய உதய மையம் ஆக்கிரமிப்புகளால் மறைக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் உட்பட அனைத்து சுற்றுலா மையங்களிலும் இயற்கை எழிலை பார்த்து மகிழ தொலைநோக்கி வைத்துள்ளனர். ஆனால், கன்னியாகுமரியில் காட்சி கோபுரத்தில் முன்பு வைக்கப்பட்டிருந்த தொலைநோக்கி வசதி தற்போது இல்லை.

சூரிய அஸ்தமன மையத்தில் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளன. சீஸன் நேரத்தில் குறிப்பிட்ட பேருக்கு மேல் விவேகானந்தர் பாறைக்கு செல்ல முடிவதில்லை. பலர் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதுள்ளது. இப்பிரச் சினைகளுக்கு சுற்றுலாத்துறை தீர்வு காண வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x