Published : 22 May 2016 09:11 AM
Last Updated : 22 May 2016 09:11 AM

பல்லுயிர் பெருக்கம் நிறைந்த நாடுகளில் 9-வது இடத்தில் இந்தியா: அழியும் நிலையில் 325 வகை உயிரினங்கள்

இன்று (மே 22) உலக பல்லுயிர் பெருக்க தினம்

மனிதர்கள் வாழ்வதற்கு செயற்கையாக வாழ்விடங்களை உருவாக் கிக்கொள்ள முடியும். ஆனால், விலங்கினங்களும் தாவர இனங்களும் வாழும் இடங்களை செயற்கையாக உருவாக்க முடியாது. மனிதனும், இயற்கையும் நிலைத்திருப்பதற்கு பல்லுயிர் பெருக்கம் அவசியம். அந்தப் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பது மனிதனின் கடமை. அதனால், ஒவ்வோர் ஆண்டும் உயிரினங்கள் பாதுகாப்பை உறுதிப் படுத்த, உலக பல்லுயிர் பெருக்க தினம் மே 22-ம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. பல்லுயிரி னப் பெருக்கத்தை மக்களுக்கு விளக்கி, அதன் மூலம் அதை பாது காக்கும் விழிப்புணர்வை ஏற்படுத் துவதே இந்த தினம் கொண்டாடப் படுவதன் முதன்மையான நோக்கம்.

இதுகுறித்து வன ஆராய்ச்சி யாளரும், காந்திகிராமப் பல்கலைக் கழக உயிரியில் துறை உதவி பேராசிரியருமான ஆர்.ராமசுப்பு கூறியதாவது:

அதிகப்படியான வகைகளில் தாவரங்கள், விலங்குகள், நுண்ணு யிர்கள் இருக்கும் நிலப் பரப்பு கள், பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதியாக இருக்கிறது. உலக அளவில் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த நாடுகள் வரிசையில் பிரேசில் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு தாவரங்களில் மட்டும் 55 ஆயிரம் வகைகளுக்கு மேல் இருக்கின்றன. இந்தியா 9-வது இடத்தில் இருக்கிறது. பல்லுயிர் பெருக்கம் தாவரப் பல்லுயிர் பெருக்கம், விலங்குகள் பல்லுயிர் பெருக்கம் மற்றும் நுண்ணுயிர் பல்லுயிர் பெருக்கம் ஆகிய 3 வகையாக இருக்கிறது. குறிப்பிட்ட இட சூழ்நிலைகளில் மட்டுமே வாழக்கூடிய அரிய வகை உயிரினங்கள், இந்தியாவில் அதிகமாக இருக்கின்றன. பல்லுயிர் பெருக்கம், தட்பவெப்பம், மழை, மண் அமைப்பை வைத்துதான், ஒரு இடத்தின் பல்லுயிர் பெருக்கம் அமைகிறது.

இந்தியாவில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான தாவரங்கள், 55 ஆயிரத்துக்கும் அதிகமான விலங்குகள் இருக்கின்றன. அது போல, குறிப்பிட்ட இடச் சூழலில் மட்டும் வாழக்கூடிய அரியவகை தாவரங்கள் 5 ஆயிரம், விலங்கு கள் 2 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கின்றன. இந்தியாவில் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த இரு இடங்களில் ஒன்று மேற்கு தொடர்ச்சி மலை. மற்றொன்று கிழக்கு இமாலயக் காடுகள். இங்கு தாவரங்கள், விலங்குகள், நுண்ணு யிர்கள் அதிகம் இருக்கின்றன.

வன உயிரினங்களின் வாழிடம், வழித் தடங்களை அழித்தல், கட்டிடங்கள், வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, அறிமுகப்படுத்தப்படும் சிற்றினங் கள், மக்கள்தொகை அதிக ரிப்பு, இயற்கைக்கு மீறிய அதிகமான அறுவடைக்காக பயன்படுத்தப்படும் ரசாயன உரங் கள் உள்ளிட்டவை இந்தியாவில் பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் முக்கிய காரணிகள் ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வன அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது:

மனிதனுக்கு இன்றியமையாத உணவு, உடை, உறைவிடம் ஆகிய காரணிகளுக்கு, நாம் பல்லுயிர்களைச் சார்ந்தே வாழ வேண்டி உள்ளது. பல்லுயிர் பெருக்கம், இயற்கையாக கண் ணுக்கு தெரியாமல் நடைபெறும் பல பணிகளை செய்கிறது. வளி மண்டலத்தில் நடைபெறும் வேதி யியல் மற்றும் நீர் சுழற்சிகளை சமன்படுத்துகிறது. நீரை தூய்மை படுத்துதல் (மீன்கள்) மற்றும் மண்ணில் சத்துகளை மறுசுழற்சி செய்து (மண்புழு) வளமான நிலத்தை கொடுக்கிறது.

அழியும் உயிரினங்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் (Western Ghats) அரபிக் கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றை தடுத்து, மழைப் பொழிவை தருகிறது. இதன்மூலமே, தமிழகத்தின் 40% நீர்த் தேவையும், கேரளத்தின் 100 சதவீத நீர்த் தேவையும் நிறைவு செய்யப்படுகிறது. மேற்கு மலை தொடரே தென் தமிழக மக்களின் வாழ்வுக்கு முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. இங்குள்ள 5 வன உயிரின சரணாலயங்கள், ஒரு தேசிய பூங்கா, 3 காப்பகங்கள் போன்றவை பாதுகாக்கப்பட்ட பல்லுயிரின பெருக்கத்துக்கு வழிவகை செய்கின்றன.

உலக அளவில் அழியும் நிலையில் உள்ள 325 வகை உயிரினங்கள், இங்கு கடும் போராட்டத்துக்கிடையில் உயிர் வாழ்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x