Published : 15 Jul 2022 03:37 PM
Last Updated : 15 Jul 2022 03:37 PM

ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு மாதத்தில் குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய நிறுவன பணியாளர்கள் பணி நிபந்தனை விதிகளின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமனத்துக்கு தடை விதிக்க கோரி, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜகத்குரு ராமநாதாச்சார்யா சுவாமி ராம்பத்ராச்சார்யா ஸ்ரீ துளசி பீட சேவா நியாஸ் மற்றும் டெல்லி, உத்தரபிரதேசம், பெங்களூருவைச் சேர்ந்த எட்டு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், "தமிழகத்தில் பல கோயில்களில் அர்ச்சகர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதில், அரசு பயிற்சியகங்களில் ஓராண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் பணிக்கான தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சைவ சமய மற்றும் வைணவ சமய கோயில்களில் குறிப்பிட்ட பிரிவினரைச் சேர்ந்தவர்களையே அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும். ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு ஆகம விதிகள் உள்ளன. அதன் அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்” என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், "மனுதாரர்கள் எவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. எனவே, இந்த வழக்கை தாக்கல் செய்ய அவர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை. ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்கள் எவை என அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என விளக்கமளித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்கள் எவை என அடையாளம் காண, ஆகம விதிகள் தெரிந்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு மாதத்தில் அரசு குழு அமைக்க வேண்டும்.கோயில் வரலாறு மரபுகள் தெரிந்த நபர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை அடையாளம் கண்டு அவற்றின் பட்டியலை விரைவில் வெளியிட வேண்டும். அர்ச்சகர்கள் நியமனத்தை பொறுத்தவரை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆகம விதிகளின்படி நியமிக்க வேண்டும். விதிமீறல் இருந்தால் தனிப்பட்டவர்கள் வழக்கு தொடரலாம்” எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி துரைசாமி ராஜுவை நியமிக்கலாம் என தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பரிந்துரைத்தார். இதுகுறித்து பதிலளிக்க மனுதாரர்கள் தரப்புக்கு நீதிபதிகள் கால அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x